திறக்கப்படாமல் உள்ள புதிய மண்பாண்ட கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையில் புதிதாக கட்டப்பட்ட மண்பாண்ட கூடம் கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை சாலையூரில் 15 குடியிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்பில் உள்ளவர்கள் அனைவரும் பரம்பரையாக மண்பானை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் பானை, அடுப்பு, வடைசட்டி, தண்ணீர்பானை, களையம், குழம்பு சட்டி உள்ளிட்ட மண்பாண்ட பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். இங்குள்ள தொழிலாளர்கள் அவரவர் வீட்டின் வெளியே திறந்த வெளியிலேயே மண்பாண்ட பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். இதனால் மழை காலங்களில் உற்பத்தி செய்த பொருட்களை பாதுகாக்க முடியாமல் கடும் சிரமமடைந்து வந்தனர்.

இதனால் உற்பத்தி செய்யும் மண்பாண்ட பொருட்களை பாதுகாக்கும் பொருட்டு, குடியிருப்பு பகுதியை ஒட்டியவாறு உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் மண்பாண்டக் கூடம் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து அரசு சார்பில் ரூ.10 லட்சம் செலவில், மண்பாண்ட கூடம் கட்டிடங்கள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியை ஒட்டியவாறு அரசு புறம்போக்கு இடத்தில் மண்பாண்ட கூட புதிய கட்டிடம் கட்டப்பட்டது. கட்டிடப்பணிகள் முடிந்து 4 மாதங்கள் ஆகியும் இன்னும் மின்இணைப்பு கொடுக்காமலும், கட்டிடத்தின் முன்பகுதியில் ஆஸ்பட்டாஸ் சீட் அமைக்கப்படாமலும் உள்ளது. இதனால் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.

இது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘மழை காலங்களில் உற்பத்தி செய்யப்படும் மண்பாண்ட பொருட்கள் பாதுகாக்கும் நோக்கிலும், மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் தமிழக அரசு இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. எனவே விரைந்து மின் இணைப்பு வழங்கி, மழைக்காலம் தொடங்கும் முன்பு இந்த கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.

Related Stories: