தண்ணீர் தொட்டி இடிந்து மூதாட்டி பரிதாப சாவு: ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே தனிநபர் கட்டிய தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்ததால் ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பெரிய கிணறு அருகே பஞ்சாயத்துக்கு உட்பட்ட புறம்போக்கு இடத்தில், அப்பகுதி அதிமுக வார்டு கவுன்சிலர் கணவர் முருகன் என்பவர் துணிகள் துவைக்க, தண்ணீர் தொட்டி கட்டி இருந்தார். தண்ணீர் தொட்டி கட்டி 10 நாட்களே ஆன நிலையில் இடிந்து விழுந்ததில், அதே பகுதியை சேர்ந்த பாப்பாத்தி (58) என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் ரங்கசாமி, ஆயில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், சம்பவம் குறித்து ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் கலையரசு, நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஊராட்சி செயலாளர் கருணாகரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

மேலும் அப்பகுதியில் இடிந்து விழுந்த தண்ணீர் தொட்டியை பார்வையிட்டு, ஊராட்சி செயலாளர் கருணாகரனை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைத்தார். இதன்படி பிடிஓ சரவணன், கருணாகரனை சஸ்பெண்ட் செய்தார். இதனை கண்டித்து நாமகிரிப்பேட்டை வட்டார ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

Related Stories: