தோல் தொழிற்சாலை கழிவுநீரால் பாதிக்கப்பட்ட நிலத்தை மியாவாக்கி காடுகளாக மாற்றிய மாநகராட்சி

*12 ஆயிரம் மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன

*தன்னார்வ அமைப்புடன் சேர்ந்து அசத்தல்

திண்டுக்கல் : தோல் தொழிற்சாலை கழிவுநீரால் பாதிக்கப்பட்ட உவர் மண்ணில் தன்னார்வல அமைப்புடன் இணைந்து அடர் குறுவனம் (மியாவாக்கி காடுகள்) அமைத்து திண்டுக்கல் மாநகராட்சி அசத்தியுள்ளது.திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் பள்ளபட்டி, கொட்டபட்டி, பொன்னிமாந்துறை, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மண் மாசடைந்து நிலத்தடி நீர் உப்புத் தன்மையானது. விவசாய நிலம் உவர் மண்ணாக மாறியதால் இப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு காலத்தில் இங்கு விளைவிக்கப்படும் கொட்டபட்டி கத்தரிக்காய்க்கு அதிக கிராக்கி இருந்தது. இன்று கத்தரிக்காய் விவசாயம் முற்றிலும் அழிந்துவிட்டது.

இதனிடையே திண்டுக்கல் மாநகராட்சியும் திண்டி மா வனம் என்ற தன்னார்வல அமைப்பும் இணைந்து திண்டுக்கல் பொன்னிமாந்துறை அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் மியாவாக்கி காடுகள்(மரங்களை நெருக்கமாக வளர்க்கும் அடர் குறுவன காடுகள்) அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான திட்டப்பணிகள் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்றது. இதில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டு அடி ஆழத்தில் குழி தோண்டி 2000 டன் உயிர் கழிவுகளை கொட்டி உரமாக மக்கிய பிறகு மரக்கன்றுகள் நடப்பட்டன. நாட்டு வகைகள் மரங்களான வேம்பு, புங்கை, பூவரசு, இலுப்பை, மகிழம், மந்தாரை, நீர் மருது, வில்வம், மலைவேம்பு, தேக்கு, குமிழ், மகோகனி, வாதாம் உள்ளிட்ட16 வகைகளான 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. தற்போது இந்த மரக்கன்றுகள் இரண்டு ஆண்டுகளில் நன்கு வளர்ந்து சுமார் 15 முதல் 20 அடி உயரம் வரை வளர்ந்து அடர் குறுவன காடுகளாக காட்சியளிக்கிறது.

மண் மாசடைந்து உவர் மண்ணில் மரங்கள் நன்கு வளர்ந்திருப்பதை அவ்வழியாக செல்பவர்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். திண்டுக்கல் மாநகராட்சியின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.இது குறித்து திண்டி மா வனம் தலைமை ஒருங்கிணைப்பாளர் முருகேசன் கூறுகையில், ‘‘கடந்த சில ஆண்டுகளாக திண்டுக்கல் மாநகராட்சியும் திண்டி மா வனம் தன்னார்வல அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டது.

அதன்படி பொன்னி மாந்துறை அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மியாவாக்கி காடுகள் அமைக்க மரக்கன்றுகள் நடப்பட்டது. மரங்கள் வளர தேவையான நீர் மற்றும் பராமரிப்பு செலவுகளை நாங்களே ஏற்றுக் கொண்டோம். டிஆர்டிஏ பங்களிப்போடு இந்த குறுவனம் பராமரிக்கபட்டு வருகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 32 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை இங்கு பராமரிப்பு வேலை செய்பவர்களுக்கு சம்பளமாக வழங்கி வருகிறோம்.

இங்கு வளரும் மரங்களுக்கு இயற்கை உரங்கள் மட்டுமே இடப்படுகிறது. நாட்டு இன மாடுகளின் சாணத்துடன் நாட்டு சர்க்கரையை சேர்த்து நொதித்த பின்பு உரமாக தெளிக்கப்பட்டது. தற்பொழுது மரங்கள் நன்கு வளர்ந்து சோலைவனமாக காட்சியளிக்கிறது. உவர் மண்ணில் இவ்வாறாக பசுமையான மரங்கள் வளர்ந்து இருப்பது பெரும் சாதனைதான். இதுவரை எங்களின் அமைப்பு மூலம் 2 வருடங்களாக 48 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் அரசு முன்நின்று தன்னார்வல அமைப்புடன் இணைந்து அரசு நிதியில் இம்மாதிரியான குறுங்காடுகள் உருவாக்க முற்படும் போது பல ஏக்கர் பரப்பளவில் பசுமை பரப்பு உருவாக்கப்பட்டு பல்லுயிர் பெருக்கத்திற்கு உறுதுணையாக இருக்கும்’’ என்றார்.

Related Stories: