கோடநாடு காட்சி முனை மேம்படுத்தப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

கோத்தகிரி :  கோத்தகிரியில் உள்ள கோடநாடு காட்சி முனை சுற்றுலா பயணிகளின் வசதிக்கேற்ப மேம்படுத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இரண்டாம் கட்ட சீசன் துவங்கியுள்ள நிலையில் நாளுக்கு நாள் வெளி மாநில,மாவட்ட மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வரக்கூடிய நிலையில் பார்க்கிங் வசதி, காட்சி முனை பாதுகாப்பு வசதிகள், கூடுதல் நாற்காலிகள், தொலை நோக்கி கருவி அமைத்தல் போன்ற தற்போதுள்ள வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்ைக எழுந்துள்ளது.

 நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மிக முக்கியமான பங்கு வகிப்பது கோடநாடு காட்சி முனை. இது கோத்தகிரியில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் வனத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. கோடாநாடு காட்சி முனை மாவட்டத்தின் கடைக்கோடி காட்சி முனையாகவும் அமைந்துள்ளது.நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு களித்து விட்டு சமவெளி பகுதிகளுக்கு செல்லும்போது கோத்தகிரி வழியாக வருவார்கள். அப்போது கோத்தகிரியில் உள்ள கோடநாடு காட்சி முனைக்கு வந்து இங்குள்ள தமிழ்நாடு, கர்நாடக இருமாநில எல்லைகளில் உள்ள இயற்கை அழகை கண்டு களித்து செல்வர். இக்காட்சி முனையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்கேற்ப தொலைநோக்கி மையம், காட்சி முனையில் பாதுகாப்பு வளையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

 சுற்றுலா பயணிகள் பார்க்க கூடிய வகையில் தெங்குமரஹாடா கிராமம் அமைந்துள்ள காட்சி, பவானிசாகர் அணையின் காட்சி, ராக் பில்லர் ஆகியவற்றை காண உள் மற்றும் வெளி மாநில, மாவட்ட சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர். ஆண்டுதோறும் கோடை காலங்களில் மட்டுமே களை கட்டும் கோடநாடு காட்சி முனையானது  தற்போது விழாக்கால விடுமுறை, வார விடுமுறை நாட்களில் அதிக சுற்றுலா பயணிகள் இங்கு வந்து இப்பகுதியில் நிலவும் இயற்கை கால நிலையை அனுபவிக்க படையெடுத்த வண்ணம் உள்ளனர்.ஆனால் வார விடுமுறை நாட்களில் இங்கு ஒரு நாளைக்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வரும் நிலையில் வாகனம் நிறுத்த இடம் இல்லாமல் தவிக்க நேரிடுகிறது.

மிகக் குறைந்த பரப்பளவு மட்டுமே உள்ள வாகன நிறுத்துமிடத்தை அதிகப்படுத்த வேண்டும். மேலும் இங்கு வாகனங்கள் நிறுத்துமிடம் தினந்தோறும் கோத்தகிரியில் இருந்து கோடநாடு காட்சி முனைக்கு வரும் அரசு பேருந்துகள் திரும்பும் இடமாகவும் உள்ளது. சில சமயங்களில் அதிக சுற்றுலா பயணிகள் வந்து வாகனங்கள் நிறுத்த போதிய இடம் இல்லாத சூழலில் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் கோடநாடு காட்சி முனைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி வாகன நிறுத்துமிடம் விரிவுபடுத்தவும், காட்சி முனைக்கு முன்பு உள்ள சாலையோரத்தில் இருபுறமும் உள்ள இடத்தை சீர்செய்து வாகனங்கள் நிறுத்தும் இடத்தை விரிவாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தற்போது இரண்டாவது சீசன் தொடங்கி உள்ள நிலையில் அதிக சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் சூழலில் காட்சி முனையில் தற்போது உள்ள தொலைநோக்கி இல்லத்தில் உள்ள தொலைநோக்கி கருவிவியின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். கூடுதல் நாற்காலிகள் அமைக்க வேண்டும். பள்ளத்தாக்கு பகுதிகளை பார்வையிடும் இடத்தில் தற்போதுள்ள பாதுகாப்பு வளையங்களை சீர்செய்து காட்சி முனையை மேம்படுத்த வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

Related Stories: