மாதனூர் அருகே பாலாற்றில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட ராட்சத பைப்லைனில் விரிசல் -விரைந்து சீரமைக்க கோரிக்கை

ஆம்பூர்: மாதனூர் அருகே பாலாற்றில் காவிரி குடிநீர் பைப்லைன் விரிசல் காரணமாக குடிநீர் வீணாகிறது. இதை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக ராட்சத பைப்லைனில் காவிரி குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் அருகே பாலாற்றில் வெள்ளத்தின் வேகம் காரணமாக பைப்லைனில் விரிசல் ஏற்பட்டது. பின்னர், குடிநீர் வடிகால் வாரியத்தினர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக வேலூர் மாநகராட்சி, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் காவிரி  குடிநீர் வினியோகம் தடைபட்டது. பின்னர், இந்த பைப்லைன் வெல்டிங்க் செய்து சரியானதும் குடிநீர் வினியோகம் துவங்கியது.

இந்நிலையில், மாதனூர் அருகே பாலாற்றில் இந்த பைப்லைனில் ஏற்பட்ட சிறு விரிசல் சரி செய்யப்பட்டது. ஆனால், நீரின் வேகம் காரணமாக அந்த பைப்லைனில் மீண்டும் விரிசல் உருவாகி உள்ளது. இதன்காரணமாக நீர் அதிவேகத்தில் நீரூற்றாக வெளியேறி வீணாகி வருகிறது. இதை உடனடியாக சம்பந்தபட்ட துறையினர் சீர் செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: