திருமங்கலம் அருகே 15 ஆண்டுகளாக பூட்டப்பட்ட கோயில்; பக்கவாட்டு சுவரை உடைத்து மர்மநபர்கள் மது அருந்தும் கூடாரமாக மாறிய அவலம்

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 15 ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ள கோயிலின் சுற்றுச்சுவர் உடைக்கப்பட்டு மர்மநபர்கள் மது அருந்தும் கூடாரமாக இருப்பதாகவும், தனிநபர் அபகரித்துள்ள கோயில் நிலங்களை மீட்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேசனேரி கிராமத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அங்காள ஈஸ்வரி சம்பவித்த பாலகுருநாதர் கோயில் அமைந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருவிழாவின் போது ஒலிபெருக்கி அமைத்து ஒருவருக்கொருவர் போட்டிபோட்டு பாடலை ஒலிக்க செய்ததால் ஏற்பட்ட தகராறு காரணமாக கோயில் மூடப்பட்டது.

இதையடுத்து கோயில் திறக்கப்படாததால் கோயில் பக்கவாட்டு சுவரை மர்மநபர்கள் உடைத்து, மது உள்ளிட்ட போதை பொருட்களை உட்கொண்டு அட்டகாசத்தால் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருப்பதாக கிராமமக்கள் குற்றசம்சாட்டியுள்ளனர். திருவிழாவின் போது இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 15 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள கோயிலில் இருந்த சிலைகள் சிலவற்றை காணவில்லை என கிராமமக்கள் தெரிவிக்கின்றனர். கோவிலுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை தனிநபர் அபகரித்து சுயலாபம் ஈட்டிவருவதை தடுத்து நிறுத்தவும் கோரிக்கை விடுத்திருக்கும் கிராம மக்கள் கோயிலை நிரந்தரமாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: