உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை விபத்து; சென்னையை சேர்ந்த 3 பெண்கள் பரிதாப பலி: ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் பலியானார்கள். மேலும் காரை ஓட்டிச்சென்ற வாலிபர் உள்பட இருவர் படுகாயம் அடைந்தனர். சென்னை ராயப்பேட்டை இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் உசேன் மகன் ஏஜாஸ் (28). இவருடைய மனைவிக்கு சேலத்தில் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து ஏஜாஸ் குழந்தையை பார்க்க தனது குடும்பத்தினருடன் நேற்று சேலத்திற்கு சென்று விட்டு மீண்டும் ஒரு காரில் நேற்றிரவு சென்னை நோக்கி திரும்பிக்கொண்டிருந்தனர்.

இந்த காரை ஏஜாஸ் ஓட்டி சென்றார். காரில் அவருடைய தாயார் ஹமீம் (50), தங்கை அம்ரின் (22), சித்தி நமீம் (45), அவருடைய மகள் சுபேதா (21) ஆகிய ஐந்து பேர் பயணம் செய்தனர். நள்ளிரவு நேரத்தில் அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை பு.மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புக்கட்டையில் மோதி சாலையோரம் உள்ள 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஹமீம், அம்ரின், சுவேதா ஆகிய மூன்று பெண்களும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர், காரை ஓட்டிச்சென்ற ஏஜாஸ் மற்றும் சித்தி நமீம் ஆகிய இரண்டு பேரும் படுகாயம் அடைந்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மழை காரணமாகவும், தூக்க கலக்கத்தில் வந்ததாலும் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி கிளைகளை ஒடித்துக்கொண்டு தலைகுப்புற கவிழ்ந்து இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தினால் உளுந்தூர்பேட்டை - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற உளுந்தூர்பேட்டை போலீசார் விபத்துக்குள்ளான காரை கிரேன் மூலம் மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: