நீலகிரியில் 1424 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்-பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

ஊட்டி :  நீலகிரி மாவட்டத்தில் 1424 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று நடந்தது. கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படுவதில்லை. ஒரிரு நாட்களிலேயே குணமடைந்து வீடு திரும்பி விடுகின்றனர். தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தொற்று ஏற்படும் போது அவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதுடன், தமிழக அரசு சார்பில் வாரந்தோறும் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு இதுவரை போட்டு கொள்ளாதவர்கள், இரு தவணை செலுத்தி பூஸ்டர் டோஸ் போட்டு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், பொது இடங்கள், சுற்றுலா தலங்கள் உட்பட 1364 நிலையான மையங்களும், 60 நடமாடும் மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை முகாம் நடந்தது. 5 ஆயிரத்து 696 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

 நீலகிரி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை சில மையங்களுக்கு சென்று கலெக்டர் அம்ரித் ஆய்வு செய்தார். ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மதியம் வரை முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், மதியத்திற்கு பின் வீடு வீடாக சென்று விடுபட்டவர்களுக்கும், பூஸ்டர் டோஸ் செலுத்தாவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 11.90 லட்சம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: