53 நாட்களுக்குப் பிறகு சுருளியில் குளிக்க அனுமதி-பக்தர்கள், பொதுமக்கள் குவிந்தனர்

கம்பம் : சுருளி அருவியில் பொதுமக்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதால், நேற்று மகாளய அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் தர்ப்பணம் செய்ய குவிந்தனர்.தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி. சுற்றுலா தலமாகவும், புண்ணிய தலமாகவும் விளங்குகிறது. இறந்த முன்னோர்களுக்கு திதி, மற்றும் ஆத்ம சாந்தி வழிபாடு நடத்த ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இங்கு வருகின்றனர். சுருளி அருவிக்கு ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதியில் இருந்து ஊற்று தண்ணீரும், ஹைவேவிஸ் அணை பகுதியிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரும் வந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த ஆக. 2 முதல் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

சுருளி அருவியில் 53 நாட்களுக்குப்பின் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் நேற்று காலை முதல் அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு கம்பம் கிழக்கு வனத்துறை அனுமதியளித்துள்ளது. நேற்று மகாளய அமாவாசையுடன் வார விடுமுறை என்பதால், அதிகாலையிலிருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் சுருளிக்கு வந்தனர். அருவியில் நீராடிய பின்னர் தங்களது முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய வழிபாடுகள் நடத்தினார்கள்.

பக்தர்களின் வசதிக்காக கம்பம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. கம்பம் கிழக்கு வனதத்துறை ரேஞ்சர் பிச்சைமணி தலைமையில் வனத்துறையினரும், ராயப்பன்பட்டி எஸ்ஐ மாயன் தலைமையில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: