சட்டப்பேரவை அலுவல் என்ன? இதுவரைக்கும் யாரும் இப்படி கேட்டதில்லை: ஆளுநர் மீது மான் பாய்ச்சல்

புதுடெல்லி: ‘சட்டப்பேரவை கூடுவதற்கு முன்பாக அதன் அலுவல்கள் என்ன என்பது குறித்து 75 ஆண்டுகளில் எந்த ஜனாதிபதியும், ஆளுநரும் கேட்டதில்லை,’  என்று பஞ்சாப் ஆளுநரை முதல்வர் பகவந்த் மான் விமர்சித்துள்ளார். பஞ்சாப்பில் ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்கி, ஆட்சி கவிழ்க்க பாஜ முயல்வதாக, இக்கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் குற்றம்சாட்டினார். இதனால், பஞ்சாப் சட்டப்பேரவையை கடந்த 22ம் தேதி கூட்டி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதாக முதல்வர் பகவந்த் மான் அறிவித்தார். இதற்காக, சிறப்பு பேரவை கூட்டத்தை கூட்டுவதற்கு முதலில் அனுமதி அளித்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கடைசி நேரத்தில் அதை ரத்து செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வரும் 27ம் தேதி பேரவையை மீண்டும் கூட்டுவதற்கு ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது. இதில் விவாதிக்கப்பட உள்ள அம்சங்கள் என்ன? என்று மாநில அரசிடம் ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மான் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பேரவை கூட்டம் கூடுவதற்கு முன், அதன் அலுவல்கள் என்ன என்பது குறித்து கடந்த 75 ஆண்டுகளில் எந்த ஜனாதிபதியும், ஆளுநரும் கேட்டது இல்லை. இனிமேல், எம்எல்ஏ.க்கள் பேச உள்ளதற்கும் தன்னிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்று ஆளுநர் கூறுவார். இது மிகவும் அதிகம்...’ என்று கூறியுள்ளார். அதே நேரம் மானுக்கு ஆளுநர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில், ‘அரசியல் சட்டம் 167, 168வது பிரிவுகளை பற்றி, முதல்வருக்கு அவருடைய சட்ட ஆலோசகர்கள் போதிய ஆலோசனைகளை அளிப்பது இல்லை என தெரிகிறது,’ என்று கண்டித்துள்ளார். இதனால், ஆளுநர் - முதல்வர் மோதல் நாளுக்கு நாள் முற்றி வருகிறது.

Related Stories: