கடற்படைக்கு 35 பிரம்மோஸ் வாங்க முடிவு: ரூ1700 கோடியில் ஒப்பந்தம்

புதுடெல்லி, செப். 24: கடற்படைக்கு ரூ.1,700 கோடி செலவில் 35 பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் முப்படைகளும் நவீனமயங்கள், கூடுதல் ஆயுதங்களுடன் பலப்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு, வெளிநாடுகளில் இருந்தும் நவீன ஆயுதங்கள் வாங்கப்படுகின்றன. ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்படும் எஸ்-400 போன்ற ஏவுகணை தடுப்பு சாதனங்களும் இதில் அடங்கும். இந்நிலையில், கடற்படைக்கு 35 கூடுதல் பிரம்மோஸ் ஏவுகணைகள் வாங்கப்பட உள்ளன. இந்திய - ரஷ்யா கூட்டு முயற்சியில் பிரம்மோஸ் ஏவுகணை தயாரிக்கப்படுகிறது.

இது, சூப்பர்சோனிக் ரகத்தை சேர்ந்தது. கண்டம் விட்டு கண்டம் பாயும் திறனும் கொண்டது. இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் இந்த ஏவுகணை ஏற்கனவே சேர்க்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், நீரிலும், நிலத்திலும் எதிரிகளின் தாக்குதலை முறியடிப்பதற்காக, இரட்டை பயன்பாட்டு திறன் கொண்ட 35 கூடுதல் பிரம்மோஸ் ஏவுகணைகளை கடற்படைக்கு வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ‘பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ்’ நிறுவனத்துடன் ரூ.1,700 கோடியில்  பாதுகாப்பு  அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம், கடற்படையின் பலம் மேலும் அதிகரிக்கும்.

Related Stories: