பசங்க எல்லாரும் சாப்டாங்களா..? போனில் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்; பள்ளி தலைமையாசிரியை, சமையலர் மகிழ்ச்சி

மன்னார்குடி: நல்ல இருக்கீங்களா?... பசங்க சாப்டாங்களா?... என திடீர் போன் செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விசாரித்ததால் தலைமையாசிரியை, சமையலர் மகிழ்ச்சியடைந்தனர். அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை, அண்ணா பிறந்த செப்டம்பர் 15ம்தேதி அன்று மதுரையில் தமிழக முதல்வர் மு.கஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிலையில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும்  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி பெண்ட்லேண்ட் மாடல் தொடக்கப்பள்ளி தலைமைஆசிரியைராக சுமதி (55) என்பவரும், தற்காலிக மதிய உணவு சமையலராக மணிமேகலை (37) என்பவரும் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் தற்காலிக சமையலர் மணிமேகலையின் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. புது எண்ணில் இருந்து யாரோ பேசுறாங்க என்று எண்ணி எடுத்த மணிமேகலைக்கு, வணக்கம் மா.. நான்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறேன். நல்லா இருக்கீங்களா?.. பசங்க எல்லாரும் சாப்டாங்களா?. என விசாரிக்க, முதல்வரின் கணிவான விசாரிப்பில் சமையலர் மணிமேகலை திக்குமுக்காடியுள்ளார். தொடர்ந்து காலை உணவு வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியை சுமதியிடமும் காலை உணவுத்திட்டம் குறித்து முதல்வர் பேசினார்.

இதுகுறித்து தற்காலிக சமையலர் மணிமேகலை கூறுகையில், காலை 11 மணியளவில் எனது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. நான் அந்த அழைப்பை ஏற்று யார் பேசுறதுன்னு கேட்டேன். எதிர்முனையில் பேசியவர், வணக்கம்மா நான் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறேன், நல்லா இருக்கீங்களா என்றார். காலை உணவு திட்டம் எவ்வாறு செயல்படுகிறது, உணவு குறித்த நேரத்துக்கு வருகிறதா, தரமாக உள்ளதா, பசங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுகிறார்களா, குறைகள் ஏதேனும் உள்ளதா, இன்று மாணவர்களுக்கு என்ன உணவு வழங்கப்பட்டது கேட்டார். அதற்கு நான், இன்று கோதுமை கிச்சடி, ரவா கேசரி மற்றும் சாம்பார் வந்தது. சுவையாகவும், தரமானதாகவும் இருந்தாக கூறினேன். குறைகள் எதுவும் இல்லை என்றேன். இந்த திட்டத்தை கொண்டு வந்து ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் பசியை போக்கிய முதல்வருக்கு நன்றியும் கூறினேன் என்றார்.

Related Stories: