போடியில் 150 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்-5 கடைகளுக்கு ரூ.3,000 அபராதம் விதிப்பு

போடி :  கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் முதல்முறை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பதவியேற்ற காலகட்டம் தமிழகம் பெரும் தள்ளாட்டத்தில் இருந்தது. கொரோனா பெருந்தொற்று, பருவமழை பாதிப்புகள், நிதிச்சுமை என நெருக்கடிகள் அடுத்தடுத்து வந்தன. அவற்றே செம்மையாக ஒருபக்கம் கையாண்டு கொண்டே, மறுபுறம் மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தினார். அதுவும் முதல் நாளில் இருந்தே களப்பணியை தொடங்கி விட்டார்.

அவற்றில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு, ஆக்கிரமிப்புக்குள்ளான கோயில் நிலம், நீர்நிலைகள் மீட்பு போன்ற விஷயங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதில் பல்வேறு ெசயல்திட்டங்கள் நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது. தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

குறிப்பாக  பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்விற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.  பாலிதீன் பை உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு கடந்த அதிமுக ஆட்சியில் அதிகளவில் இருந்ததாகவும், தற்போது படிப்படியாக குறைந்து மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருவதாகவும், விதிமீறி செயல்படும் கடைகள் மீது அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

 தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் போடி நகர் பகுதியில் உள்ள கடைகளில் இருப்பு வைத்து விற்கப்படுவதாக போடி நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் வந்தது.

அதன்படி, நகர்மன்றத் தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர், கமிஷனர் (பொ) பொறியாளர் செல்வராணி ஆகியோரின் உத்தரவுப்படி, போடி காமராஜர் பஜாரில் உள்ள கடைகளில்  நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், அகமது கபீர், தர்மராஜ், கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

 அச்சோதனையில் 150 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட பாலிதீன் பை உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அங்குள்ள  5 கடைகளுக்கு ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பாலிதீன் பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால், அந்த கடையின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related Stories: