வீரநாராயணசேரி கூட்டுறவு சங்க முறைகேடு சப் கலெக்டர் விசாரிக்க உத்தரவு-விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிரடி

நாகர்கோவில் : வீரநாராயணசேரி கூட்டுறவு சங்க முறைகேடு தொடர்பாக சப் கலெக்டரை கொண்டு விசாரணை நடத்த குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உத்தரவிட்டார்.குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அரவிந்த் தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, வேளாண் இணை இயக்குநர் அவ்வை மீனாட்சி, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் வசந்தி, தோட்டக்கலைத்துறை அதிகாரி ஷீலா ஜாண், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வாணி, பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ, விவசாயிகள் புலவர் செல்லப்பா, பத்மதாஸ், முருகேசபிள்ளை, விஜி, ஹென்றி, தேவதாஸ், செண்பகசேகரபிள்ளை, தங்கப்பன் உட்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வீரநாராயணசேரி கூட்டுறவு சங்க முறைகேடுகள் உண்மை என்று இணைபதிவாளர் கடந்த கூட்டத்தில் ஒத்துக்கொண்ட நிலையில் பெண் அதிகாரியை சஸ்பென்ட் செய்ய கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டாரா? என்று விவசாயிகள் கேள்வி எழுப்பினர். கூட்டத்தில் இணைபதிவாளர் கலந்துகொள்ளவில்லை. மேலும் புகார் தொடர்பாக துறைரீதியாக விசாரித்ததில் அது உண்மை இல்லை என்று கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி பதில் அளித்தார். இதனை தொடர்ந்து கூட்டுறவு இணை பதிவாளர் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு தொடர்கிறது. தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுப்பது இல்லை. அழகன்பாறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை அடகு வைத்தவர்களுக்கு திரும்ப வழங்கவில்லை, கோர்ட் தீர்ப்பு வரவில்லை என்று கூறுவது ஏற்புடையது அல்ல என்றும் புலவர் செல்லப்பா குற்றம்சாட்டினார்.

இதற்கு பதில் அளித்த அதிகாரி, வழக்கு முடியும் வரை நகையை திரும்ப வழங்க இயலாது என்றார். இது தொடர்பாக பதில் அளித்த கலெக்டர் அழகன்பாறை கூட்டுறவு வங்கி கொள்ளை ெதாடர்பாக நகைகளை உரியவர்களுக்கு உடனே திரும்ப வழங்க நீதிமன்ற உத்தரவு பெற நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். மேலும் வீரநாராயணசேரி கூட்டுறவு சங்க முறைகேடுகள் தொடர்பாக பத்மநாபபுரம் சப் கலெக்டரை கொண்டு விசாரணை நடத்தி அந்த அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதியளித்தார்.

சிற்றார் அணை நீர்பிடிப்பு பகுதியில் தேக்கு, சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளது.

பல நாட்களாக இது நடந்து வருகிறது. பொதுப்பணித்துறை நடவடிக்கைகள் எடுக்கவில்லை. வனத்துறையினரும் அந்த பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர். அணைக்கு பாதுகாப்பு இல்லை என விவசாயி புலவர் செல்லப்பா குற்றம் சாட்டினார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் பதில் அளித்தனர்.

நல்லிக்குளம் ஏலாவில் நெல் வயல்கள் அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்வார்கள். விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக பட்டா போடக்கூடாது, இது தொடர்பாக பத்திரபதிவு செய்யக்கூடாது, பிளான் அப்ரூவல் செய்யக்கூடாது என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக ‘தினகரன்’ செய்தி வெளியிட்டதை சுட்டிக்காட்டினர்.

விளைநிலங்களில் வீட்டுமனை அமைத்தால் பிளான் அப்ரூவல் வழங்கமாட்டார்கள் என்று கலெக்டர் உறுதியளித்தார். இரட்டைக்கரை சானலில் ரயில்வே பணிகள் எப்போது முடியும், தண்ணீர் வழங்கப்படுமா? என்று விவசாயிகள் கோரிக்ைக வைத்தனர். அக்டோபர் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும் என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் பதில் அளித்தனர். குளங்களில் வண்டல் மண் எடுப்பது தொடர்பாக நிலுவையில் உள்ள கோப்புகள் மீது என்ன நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளது, பேரூராட்சி குளங்கள் தொடர்பாக ஏன் அரசிதழில் வெளியிடப்படவில்லை என்றும் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் பதில் அளித்தனர்.

குமரி மாவட்டத்தில் காலி நிலங்கள் இல்லை, இங்கு மண் மேடுகள் உள்ளது, சமப்படுத்துகிறோம் என்று செம்மண் குவாரிகள் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த கலெக்டர் விதிகளை மீறி மண் எடுக்க அனுமதி புதியதாக ஏதும் வழங்கப்படாது, ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

கன்னியாகுமரியில் பழத்தோட்டம் அமைத்து 100 ஆண்டுகள் ஆவதால் நூற்றாண்டுவிழா கொண்டாட வேண்டும், புதிய மரச்சீனி வகைகளையும், புதிய நெல் ரகங்களையும் குமரி மாவட்டத்தில் கொண்டுவர வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். திங்கள்நகரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் நெல் அறுவடை தொடங்கியதும் செயல்படத்தொடங்கும். வேம்பனூர் ‘ராம்சர்’ பகுதியாக மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது, பறவைகள் சரணாலயம் இல்லை.

இது ெதாடர்பான வனத்துறை சார்பில் விளக்க கூட்டம் நடத்தப்படும். இரட்டைக்கரை சானலில் ரயில்வே பணிகள் முடிந்ததும் தண்ணீர் விநியோகம் தொடங்கும். இந்த ஆண்டு கிசான் மேளா நடத்தப்படும், அதில் வேளாண் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி நடத்தப்படும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

திருப்பதிசாரம் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தென்னையில்  ஒருங்கிணைந்த வேர்வாடல் நோய் மேலாண்மை தொடர்பாக துண்டுபிரசுரத்தை கலெக்டர்  அரவிந்த் வெளியிட்டார். சர்க்கரை வள்ளிக்கிழங்கு இயற்கை முறையில் சாகுபடி செய்து அதிக மகசூல் எடுத்த விவசாயி அதனை கூட்டத்திற்கு எடுத்து வந்து காண்பித்தார், அவரை கலெக்டர் பாராட்டினார்.

மொட்டக்குருவா, கட்டிச்சம்பா ரகங்கள் ஆய்வு

தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிகுளத்திலிருந்து பெறப்பட்டுள்ள சில மரபு வரிசை செடி விதைளை கொண்டு டிபிஎஸ்-3 நெல் ரகத்திற்கு மாற்று இரகத்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வேளாண்மை ஆராய்ச்சிநிலையம், திருப்பதிசாரத்தில் உருவாக்கப்பட்ட சில மரபு வரிசை செடி விதைகள் தற்போது வயல்வெளி ஆய்வில் உள்ளது. நாட்டு ரகங்களான மொட்டக்குருவா, கட்டிச்சம்பா ரகங்களில் மரபணுபிறழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டு 380 மரபு வரிசை செடிகளும் வயல்வெளி ஆய்வில் உள்ளன. இனக்கலப்பு மூலமும் சேர்க்கைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

தோவாளை மார்க்கெட்டில் விளம்பர பலகை

கன்னியாகுமரி விற்பனைக் குழுவின் கீழ் செயல்பட்டு வரும் தோவாளை மலர் வணிக வளாகத்தில் பல வகையான பூக்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்தும், மதுரை, ஒசூர் போன்ற வெளி மாவட்டங்களிலிருந்தும் வருகிறது. பூக்களின் விலை நாள்தோறும் வரத்தும் மற்றும் தேவைக்கேற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது.

பூக்களின் விலைகளை மதியம் வேளைகளில் நிர்ணயம் செய்வது நீண்ட காலமாகவே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பூக்களின் விலை அதிகரிக்கும் காலங்களில் காலையில் பூக்களை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கும் மதியம் நிர்ணயிக்கப்படும் அதிகபட்ச விலையிலேயே கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அலுவலகத்தில் மலர்களின் விலை விவரங்கள் எழுதப்பட்டு வருகிறது. வருங்காலத்தில் பூக்களின் விலை மக்களுக்கு தெரியும் வகையில் விளம்பரப் பலகை வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Related Stories: