அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் வகையில் காங்கிரசார் 25ம் தேதி நடைபயணம்

சென்னை: அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் வகையில், காங்கிரசார் மேற்கொள்ளும் நடைபயணத்தை வரும் 25ம் தேதி கே.எஸ்.அழகிரி தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி பாதுகாப்பு வழங்கப்பட்ட தலித்துகள், சிறுபான்மையினர், பின்தங்கிய சமுதாயத்தினர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக, உ.பி.யில் அடக்குமுறைக்கு ஆளாகி பலரது உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கிறது. 19 வயது தலித் பெண் காவல்துறையினரால் பலவந்தமாக பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை.

எனவே, இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க நடைபயணம் வருகிற 25ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் தொடங்கி வைக்கிறேன். இந்நிகழ்வில், முன்னாள் ஒன்றிய அமைச்சர்கள் சிதம்பரம், திக்விஜய் சிங், சல்மான் குர்ஷித், ஜெய்ராம் ரமேஷ், அகில இந்திய காங்கிரஸ் முன்னணி அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் ராஜூ மற்றும் அந்த அமைப்புகளின் தேசிய தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

Related Stories: