எல்லாபுரம் ஒன்றியத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி: சசிகலா பங்கேற்பு

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா நேற்று கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட எல்லாபுரம் ஒன்றியம்  கன்னிகைப்பேர்,  பெரியபாளையம், தண்டலம்,  பாலவாக்கம்,  ஊத்துக்கோட்டை பகுதிகளில் மக்கள் சந்திப்பு  நிகழ்ச்சி நடத்தினார். இதற்கு எல்லாபுரம் எல்.ரஜினி தலைமை தாங்கினார். தமிழக அரசின் முன்னாள் கொறடா பி.எம்.நரசிம்மன் முன்னிலை வகித்தார்.

மக்கள் சந்திப்பில் சசிகலா பேசியதாவது;

தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் பெண் சிசு கொலை தடுக்க தொட்டில் குழந்தை திட்டம்,  அம்மா உணவகம்,  தாலிக்கு தங்கம்,  மாணவர்களுக்கு லேப்டாப்  போன்ற பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். தமிழக மக்களை காப்பாற்ற அதிமுகவால் மட்டுமே முடியும். அதிமுக ஒன்றிணைய வேண்டும். 100 நாள் வேலைக்கு பெண்கள் காலை 7 மணிக்கு செல்கிறார்கள். அதனால் அவர்கள் மிகவும்  சிரமப்படுகிறார்கள். எனவே, அந்த நேரத்தை மாற்ற வேண்டும். எல்லாபுரம் ஒன்றியத்தில் அரசு கலைக் கல்லூரி திறக்கவேண்டும்,  ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வரவேண்டும். இவ்வாறு பேசினார்.

நிகழ்ச்சியில் திருவெண்ணைநல்லூர் ஒன்றிய செயலாளர் ஜெ.குமார், நிர்வாகிகள் சரவணன்,  ஈஸ்வரன்,  ரவி,  லவகுமார் ஆனந்தன்,  ராஜேந்திரன்,  முன்னாள் மாவட்ட செயலாளர் ஜீவானந்தம்,  பூவை.கந்தன்,  வேலூர் மாவட்ட செயலாளர் வாசு, கோட்டீஸ்வரன்,  விஜயகுமார் மற்றும் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக எல்லாபுரம் ஒன்றியத்தின் சார்பில், சசிகலாவுக்கு கிருஷ்ணர் சிலை வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை எல்லாபுரம் எல்.ரஜினி செய்திருந்தார்.

Related Stories: