ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க எல்லை பகுதிகளில் கண்காணிக்க 24மணி நேர சிறப்பு ரோந்து குழு அமைப்பு: புட்செல் எஸ்பி துவக்கி வைத்தார்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த, எல்லைப் பகுதி வழியாக ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க 24 மணி நேரம் சிறப்பு ரோந்து குழு அமைப்பை புட்செல் எஸ்.பி துவக்கி வைத்தார். பொள்ளாச்சி வழியாக லாரி,டெம்போ,சரக்கு ஆட்டோக்களில்,சில ஆண்டுக்கு முன்பு வரை அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தல் இருந்து வந்தது. இதன்பின் கனரக வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்துவது குறைந்து, இருசக்கர வாகனம் மற்றும் சரக்கு வாகனங்கள் மூலம் ரேஷன் அரிசி கடத்தல் அவ்வப்போது தொடர்ந்தது. நகர் மற்றும் பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் ரேஷன் அரிசி மீனாட்சிபுரம்,செமனாம்பதி, வடக்கிபாளையம்,நெடும்பாறை  உள்ளிட்ட பல்வேறு வழிகளில் உள்ள வாகன சோதனைச்சாவடியை தாண்டி கடத்தப்படுவதாக புகார் வந்தது.

இதையடுத்து அவ்வப்போது, தமிழக எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில், அதிகாரிகள் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர், இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து, பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, தமிழக-கேரள எல்லையான மீனட்சிபுரம் பிரிவு பகுதியில், உணவு பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைக்காக, பைக்கில் 24மணி நேரம் சென்று கண்காணிக்க, தனி ரோந்து குழு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் துவக்க விழா நேற்று, பொள்ளாச்சியை அடுத்த மீனாட்சிபுரம் எல்லையில் நடந்தது. இதில், புட்செல் எஸ்.பி., பாலாஜி தலைமை தாங்கினார். டிஎஸ்பி  கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் எஸ்ஐக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டவர்.  

இதையடுத்து, புட்செல் எஸ்.பி. பாலாஜி கூறுகையில்,தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறைக்கு புதிதாக, மாநில எல்லையோர பகுதியை கண்காணிக்க மூன்று சிறப்பு ரோந்து குழு உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கன்னியாக்குமரி, வேலூர்,கோவை,கிருஷ்ணகிரி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில், சிறப்பு ரோந்து குழு செயல்படுகிறது.

இதில் தற்போது, பொள்ளாச்சி அருகே கேரள எல்லையோர பகுதிகளில், ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடத்தலை தடுக்கும் பொருட்டு, ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் நான்கு தலைமை காவலர்கள் கொண்ட சிறப்பு ரோந்து குழு உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படியும், உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணியின் ஆலோசனையின் படியும், தமிழ்நாடு குடிமைபொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுதுறைக்கு புதிய, மாநில எல்லையோர பகுதியை கண்காணிக்க ரோந்து குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரோந்து குழுவானது, மாநில எல்லையோர பகுதிகள் வழியாக அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்கும் பொருட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்படுவர். அவர்களிடம் கடத்தல் சம்பந்தபட்ட தகவல்களை தெரிவிக்கலாம். மேலும், 63792 68774 என்ற தொலைபேசி எண்ணையும் அழைத்து புகார் தெரிவிக்கலாம். அவர்கள், கடத்தல் மற்றும் பதுக்கலை முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வருவர்’ என்றார்.

Related Stories: