ஈஷா நாற்றுப் பண்ணைகளில் 3 ரூபாய்க்கு மரக்கன்றுகள் வழங்கும் திட்டம்: ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பு

திருச்சி: காவேரி கூக்குரல் இயக்கம் காவேரி நதிக்கு புத்துயிரூட்டி, அதை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை, பொருளாதாரத்தை மேம்படுத்த ஆக்கப்பூர்வமான செயல்கள் செய்து வருகின்றது. இந்த இயக்கம் விவசாயிகள் தாங்கள் வழக்கமாக செய்து வரும் விவசாயத்துடன் மரம் சார்ந்த விவசாயத்தை பின்பற்றி லாபகரமான முறையில் வேளாண் தொழில் செய்ய வழிசெய்கிறது. அதிக வருமானம், சுற்றுச்சூழல் மேம்பாடு, பல பயிர் சாகுபடி என விவசாயிகள்  அடையவிருக்கும் நன்மைகளை, பல நிகழ்ச்சிகள் மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது காவேரி கூக்குரல் இயக்கம். மேலும் மர விவசாயத்திற்கு மாறுகிற சூழலில் விவசாயிகளின் கரங்களுக்கு மரக்கன்றுகள் எளிமையாக சென்று சேர, ஈஷா நாற்றுப் பண்ணைகளில் 3 ரூபாய்க்கு மரக்கன்றுகள் வழங்கும் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தமிழகமெங்கும் உள்ள 30-க்கும் மேற்பட்ட ஈஷா நாற்று பண்ணைகளில் தேக்கு, மகோகனி, கருமருது உள்ளிட்ட 14-க்கும் மேற்பட்ட டிம்பர் மரக்கன்றுகள் குறைந்தபட்ச விலையான 3 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. சந்தையில் 50 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்கப்படும் மரக்கன்றுகள் இந்த இயக்கத்தில் வெறும் 3 ரூபாய்க்கு கிடைப்பது மிகுந்த ஊக்கம் அளிக்கும் வகையில் இருப்பதாக விவசாயிகள் கூறினர். செப்டம்பர் 18 ஆம் தேதி திருச்சி தொப்பம்பட்டியிலுள்ள டாக்டர் தோட்டம் - லிட்டில் ஊட்டியில் நடைபெற்ற மரப்பயிர் சாகுபடி குறித்த கருத்தரங்கில், 1500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். நலிவுற்ற வேளாண் தொழிலை மீட்டெடுக்கும் இவ்வியக்கத்தின் மகத்தான பணியை அனைத்து விவசாயிகளும், பேச்சாளர்களும் வியந்து பாராட்டினார்கள். லாபகரமான முறையில் மரப்பயிர் சாகுபடி செய்வது குறித்து நிபுணர்களும், விவசாயிகளும் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

சமவெளியில் மிளகு சாகுபடி செய்துவரும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி திரு. பூமாலை அவர்கள் மலைவேம்பு மரவகை மிகக்குறைந்த காலத்தில் நல்ல லாபம் தரக்கூடிய மரம். சமீபத்தில் எனது 3 ஏக்கரில் விளைந்த மலைவேம்பு மரங்களால் 12 லட்சம் வரை லாபம் கிடைத்தது என்றார். மேலும் அதனூடே மிளகு பயிரிட்ட அவர் அதுகுறித்து கூறியபோது, பயிரிட்ட மிளகு கொடியானது 4-ம் ஆண்டிலிருந்து காய்க்க தொடங்கிவிடும். ஒரு கிலோ மிளகு தற்போது ரூ.1000 - திற்கு விற்பனை ஆகிறது. ஒரு ஏக்கரில் 300 கிலோ முதல் 400 கிலோ வரை மிளகு சாகுபடி செய்ய முடியும். அந்த வகையில் மிளகிலிருந்து மட்டும் ஆண்டுக்கு 3 முதல் 4 லட்சம் கூடுதலாக லாபம் கிடைக்கும். மேலும் மிளகு என்பது களைகள் சூழாத, பூச்சிகள் தாக்காத, மருந்தே தேவைப்படாத, மிகக்குறைந்த பராமரிப்பு மட்டுமே தேவைப்படுகிற லாபகரமான பயிர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை மரப்பயிர் விவசாயம் செய்கின்ற எல்லாருமே அனைத்து பகுதிகளிலுமே செய்யலாம் என்றார்.

Related Stories: