ஆரோக்கியம் பேணும் சிறுதானியம்!

நன்றி குங்குமம் தோழி

நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் சிறுதானிய உணவுகள் தான் பிரதானமாக இருந்து வந்தது. அரிசி உணவினை தவிர்த்து அதை மட்டுமே மக்கள் உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். காலப்போக்கில் நாம் நம் பாரம்பரிய உணவுகளை எல்லாம் மறந்துவிட்டோம். தற்போது மீண்டும் இழந்த ஆரோக்கியத்தை மீட்டெடுக்க சிறுதானிய உணவுகளில் சுவையான லட்டு மற்றும் உணவுகளை செய்வது பற்றி தொகுத்துள்ளார் சமையல் கலை நிபுணர் கண்ணகி.

தேன் தினை மாவு

தேவையானவை

தினை அரிசி - 1 கப்,

வெல்லப்பொடி- 1/2 கப்,

தேன்,

நெய் - தலா 2 டீஸ்பூன்,

ஏலப்பொடி - 1/2 டீஸ்பூன்.

செய்முறை

தினை அரிசியை வெறும் வாணலியில் வறுத்து மாவாகச் செய்யவும். வாணலியில் நெய் விட்டு சிறிது சூடான பின் வெல்லப்பொடி, ஏலப்பொடி, தினை மாவு, நெய், தேன் என அனைத்தும் சேர்த்து கிளறி உருண்டைகள் செய்யவும்.

தினை மாவிளக்கு

தேவையானவை

தினை மாவு - 1 கப்,

வெல்லப்பொடி- 1/2 கப்,

ஏலப்பொடி - 1/2 டீஸ்பூன்,

நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை

தினை மாவை நெய்யில் வறுத்து வெல்லப்பொடி, ஏலப்பொடி, நெய் சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டைகள் செய்யவும். உருண்டைகளில் சிறு குழி செய்து நெய் விட்டு திரி போட்டு விளக்கு ஏற்றவும்.

கேழ்வரகு நெய் உருண்டை

தேவையானவை

கேழ்வரகு மாவு - 1 கப்,

வெல்லப்பொடி - 1/2 கப்,

நெய் - 2 டீஸ்பூன்,

ஏலப்பொடி - 1/2 டீஸ்பூன்.

செய்முறை

வாணலியில் நெய் விட்டு காய்ந்த பின் மிதமான தீயில் கேழ்வரகு மாவு, வெல்லப்பொடி, நெய், ஏலப்பொடி சேர்த்து வாசனை வந்தபின் எடுத்து உருண்டைகள் செய்யவும்.

கேழ்வரகு இனிப்பு உருண்டை

தேவையானவை

கேழ்வரகு மாவு - 1 கப்,

வறுத்த வேர்க்கடலை - 1/2 கப்,

வெல்லப்பொடி - 3/4 கப்,

உப்பு - தேவைக்கு.

செய்முறை

கேழ்வரகு மாவுடன் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டுப் பிசறி ஆவியில் வேக வைத்து எடுக்கவும். வேர்க்கடலையை பொடி செய்யவும். வேர்க்கடலை பொடி, வெல்லப்பொடி, வேக வைத்த கேழ்வரகு மாவு சேர்த்து உருண்டைகள் செய்யவும்.

கேழ்வரகு இனிப்பு அடை

தேவையானவை

கேழ்வரகு மாவு - 1 கப்,

வெல்லப்பொடி - 1 கப்,

தேங்காய்த்துருவல் - 1 கப்,

உப்பு - தேவைக்கு,

எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை

கேழ்வரகு மாவுடன் வெல்லப்பொடி, தேங்காய்த்துருவல், உப்பு, எண்ணெய் சேர்த்து பிசைந்து அடைகள் செய்யவும். வெண்ணெய் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

கேழ்வரகு கூழ்

தேவையானவை

கேழ்வரகு மாவு - 1/2 கப்,

வேர்க்கடலை - 1 கைப்பிடி,

உப்பு - தேவைக்கு.

செய்முறை

முந்தின நாள் இரவே கேழ்வரகு மாவை கரைத்து வைக்கவும். வேர்க்கடலையை ஊற வைக்கவும். மறுநாள் காலை சுமார் 4 டம்ளர் தண்ணீர் வைத்து கொதிக்க விடவும். கொதிக்கும்போது மாவை ஊற்றி வேக வைக்கவும். வேர்க்கடலையையும், உப்பையும் சேர்த்து வெந்தபின் இறக்கி ஆறின பின் மோர் சேர்த்து குடிக்கவும்.

கேழ்வரகு புட்டு

தேவையானவை

கேழ்வரகு மாவு - 1 கப்,

வெல்லப்பொடி - 1 கப்,

தேங்காய்த்துருவல் - 1 கப்,

நெய் (அ) நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,

உப்பு - 1 சிட்டிகை.

செய்முறை

சிறிது நீரில் உப்பு சேர்த்து அதில் கேழ்வரகு மாவு சேர்த்து பிசறி இட்லி தட்டு அல்லது புட்டு குழாயில் கேழ்வரகு மாவு, தேங்காய்த்துருவல் என மாறி மாறி போட்டு பத்து நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். நெய், வெல்லப்பொடி சேர்த்து கிளறி சாப்பிடவும்.

கேழ்வரகு அடை

தேவையானவை

கேழ்வரகு மாவு - 1 கப்,

வெங்காயம் - 2,

பூண்டு - 1,

பச்சை மிளகாய் - 2,

முருங்கைக்கீரை,

கொத்தமல்லி,

கறிவேப்பிலை - தேவையான அளவு,

உப்பு - தேவைக்கு,

எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை

கேழ்வரகு மாவுடன் பொடி செய்த வெங்காயம், மிளகாய், பூண்டு, உப்பு என அனைத்தையும் போட்டு தண்ணீர் சேர்த்து பிசையவும். சிறு சிறு உருண்டைகள் செய்யவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அடைகள் தட்டிப் போடவும். எண்ணெய் விடவும். இருபுறம் வெந்ததும் எடுக்கவும். வேர்க்கடலை சட்டினி சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

கேழ்வரகு வடை

தேவையானவை

கேழ்வரகு மாவு - 1 கப்,

வெங்காயம்,

பச்சை மிளகாய்,

இஞ்சி,

பூண்டு,

கொத்தமல்லி - தேவைக்கேற்ப,

உப்பு - தேவைக்கு,

எண்ணெய்,

சமையல் சோடா - தேவைக்கேற்ப.

செய்முறை

இஞ்சி, பூண்டை அரைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி பொடி செய்து கேழ்வரகு மாவில் சேர்த்துப் பிசையவும். உப்பு, சமையல் சோடா சேர்த்து உருண்டைகள் செய்யவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தபின் வடைகளாக தட்டிப் போடவும். இருபுறம் வெந்ததும் எடுக்கவும்.

கேழ்வரகு பக்கோடா

தேவையானவை

கேழ்வரகு மாவு - 1 கப்,

வெங்காயம்,

பூண்டு,

பச்சை மிளகாய்,

கறிவேப்பிலை,

கொத்தமல்லி,

முருங்கைக்கீரை - தேவைக்கேற்ப,

வேர்க்கடலை - 1 கைப்பிடி,

உப்பு - தேவைக்கு,

எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை

அனைத்தையும் பொடி செய்து வேர்க்கடலையுடன் கேழ்வரகு மாவு சேர்த்து கெட்டியாகப் பிசையவும். பிசைந்த மாவை காய்ந்த எண்ணெயில் உதிரி, உதிரியாக போட்டு எடுக்கவும்.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories:

>