நன்றி குங்குமம் டாக்டர்
அகமெனும் அட்சயப் பாத்திரம்
கடந்த இதழில் மனச்சிதைவு நோயின் பரவல் முறை மற்றும் அதற்கான சிகிச்சை தொடர்பான விஷயங்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த இதழிலும் மனச்சிதைவு நோய் பற்றி விரிவாகப் பார்ப்போம். சர்வதேச அளவில் பல திரைப்படங்களில் Scizophernia குறித்து தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.2001 ஆண்டு அமெரிக்காவில் வெளியாகிய A Beautiful Mind ஆங்கிலத் திரைப்படம் Paranoid Scizophernia வாழ்க்கைச் சிக்கல்களை விவரித்தது.
1996 ஆம் ஆண்டு வெளிவந்த ஆஸ்திரேலிய நாட்டு உளவியல் திரைப்படம் Shine.இத்திரைப்படம் மனச்சிதைவு நோய்க்கு ஆளான பியானோ இசைக்கலைஞனின் துயரங்களை குறித்து விரிவாக எடுத்துக் காட்டியுள்ளது. நம் ஊர் திரைப்படங்களில் 2004 ஆம் ஆண்டு வந்த திரைப்படம் மாராத்திய மொழித்திரைப்படம் Devari. இது மனச்சிதைவு நோய் விழிப்புணர்வு அமைப்பின் ஒருங்கிணைந்த தயாரிப்பில் வெளிவந்தது. Scizophernia பாதிப்பு கொண்ட தன் சகோதரனுக்கு உதவும் சகோதரியின் கதையாக இது அமைக்கப்பட்டிருக்கும்.
மனநலம் குறித்த அதிக விழிப்புணர்வு எட்டாத காலத்திலேயே 1982 – ஆம் ஆண்டு நம் இயக்குனர் சிகரம் K. பாலசந்தர் அவர்கள் அக்னி சாட்சி திரைப்படத்தில் Schizophernia பாதிப்பினை எளியவர்களுக்கும் புரிய வைக்க முயன்றிருக்கிறார். 2005 – ஆம் ஆண்டு பெங்காலி இயக்குனர் அபர்ணா சென் இயக்கிய ஆங்கில மொழித்திரைப்படம் 15 park avenue மனச்சிதைவுக்கு நோய்க்கு ஆளாகும் பெண்ணின் அறிகுறிகளையும் விளைவுகளையும் தெளிவாகக் காட்டியது. 2022 – ஆம் ஆண்டு லக்ஷ்மி மேனன் நடிப்பில் வந்த AGP Scizophernia திரைப்படதையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.
இன்னும் மலையாளத்தில் வெளிவந்த மனநோய்கள் தொடர்பான திரைப்படங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அறிவுத்தேடலுக்காகவும், மேம்பட்ட புரிதலுக்காகவும் என்ற நோக்கில் இந்தத் திரைப்படங்களைப் பார்க்கலாம். அதைவிட்டு நான் இந்தப் படங்களை எல்லாம் பார்த்தேன் நான் அறிவாளி என்றே பலரும் பறைசாற்ற விரும்புகிறார்கள். எனவே, அறிவின் அகந்தையை விட்டு இறங்கி உணர்வு ரீதியான புரிதல்களை சீராக்கி மனிதர்களை இன்னும் நெருக்கமாக வாஞ்சையோடு அணுக முயற்சி செய்தலே இன்றைய தேவை.
கடந்த ஆண்டு திறமைமிக்க இளம் நடிகர் ஸ்ரீமனச்சிதைவு நோய்க்கு ஆளாகி விட்டார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பிரபலமானதையும் தனிமையின் நாட்டமே காரணம் என்று பேசப்பட்டதையும் இங்கே நினைவு கூரலாம். இப்படி 360 கோணத்தில் விரிவாகப் பார்க்கும்போதுதான் Scizophernia பாதிப்புகளை ஆரம்ப நிலைகளிலேயே இனம் காண முடியும். மனச்சிதைவு நோயின் தீவிரத்தைப் பொறுத்து ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிகிச்சைகள் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
தொடர்ந்து உள் மருந்துகளோடு, மருந்தில்லா Counselling therphy யும் எடுத்துக்கொள்ள வேண்டும். சிகிச்சைக் காலம் முடிந்த பிறகும் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை அவர்கள் உளவியல் மருத்துவர்/ நிபுணரின் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும். உறவினரின் துணையும் எப்போதும் வேண்டும். நடைமுறையில் அது மிகவும் வேதனை தரக்கூடிய ஒன்றாகும்.பகைவனுக்குக் கூட இந்த நிலை ஏற்படக்கூடாது என்று நாம் எண்ண வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் World scizophernia மே 24 – ஆம் தேதி கடைபிடிக்கப்ப்படுகிறது. ஒட்டுமொத்தமாக உலக அளவில் 20 மில்லியனுக்கும் மேற்பட்டிருக்கும் மன நோய் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கான கருணை, அர்ப்பணிப்பு உணர்வை வலியுறுத்தும் நோக்கில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. ஆனால், இவை குறித்த விழிப்புணர்வு சமூக வலைத்தளங்களில் ஏற்படுவதில்லை. ஊடகங்களில் அவசியமற்றவை முன்னிறுத்தப்படும் காலமிது. எனவே, பல்வேறு சேவைதளங்கள் அளித்து வரும் Scizhiphernia மீட்பு சிகிச்சைகள் குறித்த விவரங்களும் பரவலாக சென்று சேரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
“Different Sources Of Help and Fight against Stigma” என்ற தாரக மந்திரத்தோடு மனநோயாளிகளை இழிவாகப் பார்ப்பது, மனநலம் குறித்து வெளிப்படையாகப் பேசத் தயங்குவது இவற்றை எல்லாம் உடைப்பதே இதன் நல்ல நோக்கமாகும். நாமும் நம் ஆழ்மனதில் படிந்திருக்கும் கருணையை மீட்டெடுப்போம். பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்து கொள்வோம். கிடைத்த வாழ்வின் மீது நன்றியுணர்வு, மாற்ற இயலாதவைகளுக்கு மன்னிப்பு, நமக்கு அப்பாற்பட்டவொரு சக்தியின் மேல் நம்பிக்கை, நேர்மறை எண்ணம், சீரான உடற்பயிற்சி , சமச்சீர் உணவு, நிம்மதியான உறக்கம், நல்ல உறவுகளைப் பேணுதல் எனும் வாழ்க்கை முறையே நம்மை மனக்கோளாறுகளிலிருந்து காப்பாற்றும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு மனச் சிக்கல்கள், ஆளுமைக் கோளாறுகள் நடைமுறை உளவியல் சவால்கள் குறித்து உங்களோடு பகிர்ந்து வந்துள்ளேன். என்னுடைய உளவியல் கல்வி, வாழ்க்கை அனுபவம் , சிகிச்சை வழங்கல்களின் நேரடி அனுபவங்களோடு அங்கீகரிக்கப்பட்ட இணைய வழி தரவுகளின் புள்ளி விவரங்கள் ஆகியவற்றைப் பொருத்தியதாகவே இருக்க சிரத்தை எடுத்துக் கொண்டேன்.
அந்த முயற்சியின் மனநிறைவில் இந்த நிறைவுக் கட்டுரையில் வாய்ப்பளித்த குங்குமம் டாக்டர் இதழ் நிர்வாகிகளுக்கும் , வாசித்த வாசகர்களுக்கும் நன்றியினைச் சொல்லிக் கொள்கிறேன்.அகம் எனும் உள்மனம் நம் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை நிச்சயம் அது கேட்டதைக் கொடுக்கும் அட்சய பாத்திரமே என நம்புவோம். பயணிப்போம்.
தொகுப்பு: மனநல ஆலோசகர் ஜெய ஸ்ரீ கண்ணன்
