ரத்த ஓட்டத்தைச் சீராக்கும் பூண்டு டீ!

நன்றி குங்குமம் டாக்டர்

நம்மில் பலருக்கும் காலையில் எழுந்தவுடன் சூடாக காபியோ அல்லது டீயோ இல்லாவிட்டால் அன்றைய நாளே சுறுசுறுப்பாக இல்லாதது போல் இருக்கும். அந்தளவிற்கு காபியும் டீயும் மனித உணர்வுடன் கலந்துவிட்டது. ஆனால், காபி, டீயுடன் சேர்க்கும் பால், சர்க்கரை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, சமீபகாலமாக பலரும் டீ, காபிக்கு மாற்றாக செம்பருத்தி டீ, சங்குப் பூ டீ என பலவகையான மூலிகை டீக்கு மாறி வருகின்றனர். அந்தவகையில், பூண்டு மட்டுமே பயன்படுத்தி டீ போட்டு குடிப்பதும் பல உடல் உபாதைகள் சரி செய்யவும் உதவுகின்றது என்கிறது ஆய்வுகள். அது குறித்து தெரிந்து கொள்வோம்.

பூண்டு டீ நன்மைகள் மற்றும் அதை தயாரிப்பது என்பதை பார்ப்போம். பூண்டின் முழு மருத்துவ குணத்திற்கும் காரணம் அதில் உள்ள ‘அல்லிசின்’ என்ற வேதிப்பொருள் தான். பூண்டை நசுக்கும் போதுதான் இந்த அல்லிசின் உருவாகிறது. இது இயற்கையான ஆன்டி-பயாடிக் ஆகச் செயல்பட்டு, உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழிக்கிறது. பூண்டு டீ தொடர்ந்து குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு கணிசமாகக் குறையும். மேலும், ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை நீக்கி, ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதுடன், மாரடைப்பு போன்ற இதய நோய்கள் வரும் அபாயமும் தடுக்கப்படுகிறது.

சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் அடிக்கடி ஏற்படுவதை தடுக்க பூண்டு டீ ஒரு சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாகும். குறிப்பாக மழை மற்றும் குளிர்காலங்களில் இதைக் குடிப்பது தொண்டை கரகரப்பு மற்றும் நெஞ்சுச் சளியைக் கரைத்து வெளியேற்ற உதவும்.உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கும் பூண்டு டீ ஒரு வரப்பிரசாதம் ஆகும். இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, தேவையற்ற கொழுப்புகளை எரிக்க உதவுகிறது. மேலும், செரிமானக் கோளாறுகள், வாயுத் தொல்லை மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்னைகளையும் சரி செய்கிறது.

தொகுப்பு: தவநிதி

Related Stories: