அதிமுக தலைமை அலுவலகம் சேதம் முதல் கட்ட விசாரணை அறிக்கையை ஐகோர்ட்டில் சிபிசிஐடி இன்று தாக்கல்

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, முதல்கட்ட விசாரணை அறிக்கையை இன்று உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்கின்றனர். அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கையை வலிறுத்தி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இதற்கிடையே கடந்த ஜூலை 11ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்தார்.

அப்போது அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் பூட்டை உடைத்து ஜெயலலிதா அறையில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் வேனில் ஏற்றப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் 3 முன்னாள் எம்எல்ஏக்கள், 2 காவலர்கள் உட்பட 45 பேர் படுகாயமடைந்தனர். இந்த மோதல் தொடர்பான வழக்கை தற்போது சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன்படி கடந்த 7ம் தேதி விசாரணை அதிகாரி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான போலீசார், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்து வீடியோ பதிவுகளுடன் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதைதொடர்ந்து சிபிசிஐடி அளித்த சம்மன்படி கடந்த 14ம் தேதி, அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி ஒன்றரை மணி நேரம் விளக்கம் அளித்தார். அப்போது, ஜெயலலிதா பயன்படுத்திய அறையில் வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த பொருட்கள், அலுவலக சொத்து பத்திரங்கள் குறித்தும் விளக்கம் அளித்தாக கூறப்படுகிறது. பின்னர் அலுவலக மேலாளர் மகாலிங்கம் அளித்த விளக்கத்தை தொடர்ந்து சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் உதவி ஆய்வாளர், காவலர் என 3 பேர் கொண்ட குழுவினர் கடந்த 15ம் தேதி 2.50 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் மீண்டும் விசாரணை நடத்தினர்.

பின்னர் அதிமுக தலைமை அலுவலகம் சேதப்படுத்திய வழக்கில், புகார் அளித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அலுவலகத்தில் நேற்று முன்தினம் சிபிசிஐடி சிறப்பு குழுவினர் விசாரணை நடத்தினர். அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் கூறியதை சிபிசிஐடி போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்தனர். இந்நிலையில் அதிமுக அலுவலகம் மோதல் வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதனால் சிபிசிஐடி விசாரணை குழுவினர், இதுவரை நடத்திய விசாரணையை அறிக்கையாக தயாரித்து இன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்.

Related Stories: