கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் டிஜிட்டல் காயின் நிறுவனம் நடத்தி ரூ.1000 கோடி மோசடி: 8 இடங்களில் சோதனை; 2 பேர் கைது

கிருஷ்ணகிரி: டிஜிட்டல் காயின் நிறுவனம் நடத்தி ரூ.1000 கோடி மோசடியில் ஈடுபட்டதாக வந்த புகாரில் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் 8 இடங்களில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி, 2 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா, அங்கம்பட்டி, வசந்தம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர்(30). தனியார் நிறுவன ஊழியர். இவர் கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில், ஒரு புகார் மனு அளித்தார்.

 அதில் கூறியிருப்பதாவது:

எனது உறவினர் யுவராஜ், என்னை ஓசூர் ராமகிருஷ்ணா நகரில் உள்ள ஏ.கே. டிரேடர்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வரும் அருண்குமாரிடம், கடந்த ஏப்ரல் மாதம் அழைத்து சென்றார். அவருடன் கிருஷ்ணகிரி நந்தகுமார், மத்தூர் சங்கர், பிரகாஷ், பர்கூர் சீனிவாசன், மாரண்டஅள்ளி வேலன் ஆகியோர் இருந்தனர். அவர்கள் யுனிவர் காயின் என்ற கிரிப்டோ கரன்சி நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என கூறினார்கள். அவர்கள் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி, நான் ரூ.5 லட்சத்தை அவர்களது வங்கி கணக்கிற்கு அனுப்பினேன். அதன் பிறகு ரூ.1 லட்சத்து 93 ஆயிரம் ரொக்கமாகவும், மேலும் ரூ.77 ஆயிரம் வங்கி கணக்கிற்கும் அனுப்பினேன். இவ்வாறு ரூ.7.70  லட்சம் முதலீடு செய்தேன்.

இதன் பிறகு எனது வங்கி கணக்கிற்கு, வாரந்தோறும் ஊக்கத்தொகை வரும் என கூறினார்கள். ஆனால் எந்த தொகையும் வரவில்லை. என்னை போல அவர்கள் பலரிடம் ரூ.1000 கோடி  ஏமாற்றி உள்ளனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது தொகையை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. அந்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, ஓசூர் ஏ.கே. டிரேடர்ஸ் உரிமையாளர் அருண்குமார் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று காலை கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு என 5 மாவட்டங்களை சேர்ந்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 50க்கும் மேற்பட்டவர்கள், மோசடி புகாருக்குள்ளானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என 8 இடங்களில், காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

இதில், பிரகாஷ் வீட்டில் 12 பவுன் நகையும், சீனிவாசன் வீட்டில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.30 லட்சம் மதிப்புள்ள ஒரு சொகுசு கார், ரூ.5 லட்சம் மதிப்புள்ள ஒரு கார், ரூ.10 லட்சம் மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், ரூ.1.25 லட்சம் ரொக்கம், என ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்துக்கள், 16 ஏடிஎம் கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பிரகாஷ், சீனிவாசன் ஆகிய 2 பேரையும், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

Related Stories: