நெமிலி அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்த வீடுகள் சமூக விரோதிகள் கூடாரமாக மாறி வருகிறது: தொடர் மணல் கொள்ளையை தடுக்க கோரிக்கை

நெமிலி: நெமிலி அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்த வீடுகள் சமூக விரோதிகள் கூடாரமாக மாறுகிறது. தொடர்ந்து மணல் கொள்ளை கண்டு கொள்ளாத வருவாய்த்துறையினரால் அவலம் நீடிக்கிறது. எனவே  மாவட்ட நிர்வாகம் உடனடியாக   நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா பள்ளுர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான மேசக்கால் பகுதியில்  பள்ளுர்  பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசை வீடுகள் கட்டப்பட்டு வசித்து வந்துள்ளனர். இதில் தற்போது சுமார் 5க்கும் குறைவான குடும்பத்தினரை சார்ந்தவர்கள் மட்டும் வசித்து வருகின்றனர். மீதமுள்ள வீடுகளில் இருந்தவர்கள் வீட்டை காலி செய்து விட்டு பல்வேறு இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று விட்டனர். ஆனால் இவர்கள் குடிசை மற்றும் சிமெண்ட் வீடுகள் கட்டி விடப்பட்ட வீடுகள் பொதுமக்கள் யாரும் இன்றி வீடுகள் மட்டும் தனியாக உள்ளது.

இந்தப் பகுதியில் உள்ள  சுமார்  20க்கும் மேற்பட்ட காலி  வீடுகள் உள்ளது. இந்த வீடுகள் உள்ள பகுதி ராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் எல்லைகள் அருகில் உள்ளதால்  காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சமூக விரோதிகள் சிலர் கஞ்சா விற்பனை செய்தும் மற்றும் கஞ்சா பயன்படுத்தி போதையில் தங்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதிகளில் டிராக்டர் மற்றும் சில   வாகனங்களில் ஜேசிபி இயந்திரம் உதவியுடன்  இரவு நேரங்களில் அதிக அளவு மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக தெரிவிக்கின்றனர்.

திருமால்பூர், பனப்பாக்கம், நெல்வாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பள்ளுரில் உள்ள திருமால்பூர் ரயில் நிலையத்திற்கு சென்னைக்கு தினந்தோறும்  பல்வேறு பணிகளுக்காக ரயில் மூலம் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு  பணிக்குச் சென்று வருகின்றனர். பணிகளை முடித்துவிட்டு மீண்டும் இரவு நேரங்களில் பள்ளுரில் இருந்து திருமால்பூர் வழியாக இரு சக்கர வாகனங்களில் வரும்போதும், அரசுக்கு சொந்தமான மேசக்கால் பகுதியில் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்ட பகுதிகளில் கஞ்சா ஆசாமிகள் வழிமறித்து கத்திகளை காட்டி அவர்களிடம் இருந்து பணம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து  தப்பித்து ஓடுகின்றனர். இதனால் இப்பகுதிகளில் இரவு நேரங்களில் வருபவர்கள் உயிர் பயத்துடன் வந்து செல்கின்றனர். இந்தப் பகுதி காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட எல்லை பகுதிகளாக உள்ளதால் குற்றவாளிகளை பிடிக்க எல்லை பிரச்னைகள் உள்ளதால் காவல்துறையினர் தவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் இந்த  பகுதி பொதுமக்கள் பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரைக்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பள்ளுர் மேசக்கால் பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு அனாதையாக உள்ள வீடுகளை வருவாய்த்துறையினர் உடனடியாக இடித்து  அப்புறப்படுத்தினால் சமூகவிரோதிகள் ஆக்கிரமிப்பு இல்லாமல் தவிர்க்கலாம். இதனால் பொது மக்களுக்கு பாதிப்பின்றி இருக்க வேண்டும். அந்த வீடுகளை வருவாய்த் துறையினர் உடனடியாக அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகின்றனர். உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் பள்ளுர் மேசக்கால் பகுதியில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து சமூக விரோதிகள் கூடாரத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: