கழிப்பறையை மாணவர்கள் சுத்தம் செய்த விவகாரம் பள்ளி தலைமையாசிரியை மீது ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை: ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்த விவகாரத்தில், தலைமையாசிரியை மீது ஒரு வாரத்தில் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே இ.வேலூரைச் சேர்ந்த ரேணுகாதேவி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘இ.வேலூர் கணவாய்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி தலைமையாசிரியை, மாணவர்களைக் ெகாண்டு பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்துகிறார். இதை பெற்றோர்களிடம் தெரியப்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளார். கழிப்பறையை சுத்தம் செய்யும் மாணவர்களுக்கு ரூ.10 கொடுக்கிறார்.

அவர் முறையாக பள்ளிக்கு வருவதில்லை. மாறாக வேறொருவரை ரூ.3 ஆயிரம் சம்பளத்திற்கு வைத்து பாடம் நடத்துகிறார். பள்ளி நேரத்தில் மாணவர்களுக்கு அவரது வீட்டு வேலையை கொடுக்கிறார். இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ‘‘தலைமை ஆசிரியை மீது புகார் செய்ததால், 3 மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்’’ என கூறப்பட்டது.

அப்போது நீதிபதிகள், ‘‘இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை. மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்ததும், அவர்களை பள்ளியில் இருந்து நீக்கியதும் ஏற்புடையது அல்ல. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியை மீது துறைரீதியான விசாரணை மேற்கொண்டு, ஒரு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கையளிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேரில் ஆஜராக வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related Stories: