பண்டிகை கால சிறப்பு இனிப்புகள் அறிமுகம் தீபாவளிக்கு ரூ.250 கோடிக்கு ஆவின் இனிப்பு விற்க இலக்கு: அமைச்சர் சா.மு.நாசர் பேட்டி

சென்னை: சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் பண்டிகை கால சிறப்பு ஆவின் இனிப்பு வகைகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். பின்னர், நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

தீபாவளியன்று ஏழை, எளிய நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வியாபார நோக்கோடு அல்லாமல், சேவை மனப்பான்மையுடன் ஆவின் நிறுவனம் இனிப்பு வகைகளை அறிமுகம் செய்துள்ளது. நெய் பாதுஷா, நட்ஸ் அல்வா, காஜூ கத்திலி, நெய் அல்வா, கருப்பட்டி அல்வா உள்ளிட்ட சிறப்பு இனிப்பு வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

சுகர்லெஸ் பொருட்களுக்கான ஆய்வுகள் நடந்து வருகிறது. விரைவில் அறிமுகம் செய்யப்படும். தனியார் நிறுவனத்துடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் விலை குறைவாக விற்பனை செய்யப்படும். கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.85 கோடிக்கு ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளிக்கு 700 முதல் 800 டன் இனிப்புகளை ரூ.200 முதல் ரூ.250 கோடி வரை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. நஷ்டம் ஆனாலும் பரவாயில்லை என்று குறைந்த விலையில் ஆவின் இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. கறந்த பால் கறந்தபடி கலப்படமில்லாமல் விற்பனை செய்து, 4.5 லட்சம் விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்கிறது ஆவின் நிறுவனம். துபாய், சிங்கப்பூர், அமெரிக்கா நாடுகளுக்கும் தீபாவளிக்கு சிறப்பு இனிப்புகள் விற்பனைக்கு அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: