முக தசை செயலிழப்பு பாதிப்பால் பிரபல பாப் பாடகரின் டெல்லி பயணம் ரத்து

புதுடெல்லி: முக தசை செயலிழப்பு பாதிப்பால் பாதிக்கப்பட்ட பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் வரும் 18ம் தேதி ‘ஜஸ்டின் பீபர் ஜஸ்டிஸ் வேர்ல்ட் டூர்’ என்ற கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அந்த நிகழ்ச்சியில் கிராமி விருது பெற்ற பிரபல பாப் பாடகரின் ஜஸ்டின் பீபர் (28) என்பவர் பங்கேற்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் தனது இந்திய பயணத்தை திடீரென ரத்து செய்துவிட்டார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், ‘எனக்கு ராம்சே-ஹன்ட் (முகத்தின் தசை ெசயலிழப்பு) நோய் பாதிப்பு உள்ளது. இந்தியா மட்டுமின்றி சிலி, அர்ஜென்டினா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் நடைபெற இருந்த அனைத்து கச்சேரிகளும் ரத்து செய்யப்படுகின்றன’ என்று தெரிவித்துள்ளார். அதனால் டெல்லி நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. முன்பதிவு செய்தவர்களின் பணம் வரும் 10 நாட்களில் திருப்பித் தரப்படும் என்று, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக முக தசை செயலிழப்பால் பாதிக்கப்பட்ட ஜஸ்டின் பீபர் வெளியிட்ட வீடியோவில், ‘எனது முகத்தின் பாதியளவு செயலிழந்து விட்டது. என்னால் வெளியில் செல்ல முடியவில்லை. முகத்தின் ஒரு பகுதியால் மட்டுமே புன்னகைக்க முடியும்; மற்ெறாரு பக்கத்தின் கண், மூக்கு, உதடுகளை அசைக்க கூட முடியாது. நோய் குணமடைந்த பின்னர் புதிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: