நெமிலி அருகே விபரீத பயணம் பஸ் படிக்கட்டு, ஏணியில் ஆபத்தாக தொங்கியபடி செல்லும் மாணவர்கள்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நெமிலி: அரசு மற்றும் தனியார் பஸ்களில் படிகளில் தொங்கியபடி செல்லும் மாணவ மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பயணிகள் விபத்தில் சிக்குவதை தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் தொடர்ந்து மாணவ மாணவிகள் மற்றும் பயணிகள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பஸ்ஸின் ஏணியிலும், படிக்கட்டிலும் தொங்கியபடி பயணம் செய்யும் அவல நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஓச்சேரி இருந்து பனப்பாக்கம் வழியாக நெமிலிக்கு செல்லும் பேருந்துகளில் வேட்டாங்குளம் பகுதியில் வந்த தனியார் பேருந்தில் ஆபத்தை உணராமல் ஏணிகளிலும்,  படிக்கட்டிலிலும், தொங்கியபடி  பயணிகள், மாணவர்கள் செல்கின்றனர். சில நேரங்களில் பஸ் படிகளில் தொங்கியபடி செல்லும்போது, நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடையும் அபாயம் ஏற்படுகிறது. பஸ் படிக்கட்டில் இருபுறமும் அதிக அளவு பயணிகள் தொங்கியபடி சென்றனர். மேலும் பஸ்ஸின் பின்புறம் உள்ள ஏணிகளிலும் ஆபத்தான நிலையில் மாணவர்கள் மற்றும் இனைஞர்கள் தொங்கியப்படி சென்றதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது.

பொதுமக்களுக்கும் பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் உரிமையாளர்களுக்கும் எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் ஆபத்தை உணராமல் பஸ்களின் படிகளில் தொங்கியபடியும், ஏணியில் தொங்கியபடியும் செல்வதை தடுக்க சம்பத்தப்பட்ட மாவட்ட  அதிகாரிகள் உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிக பயணிகள் மற்றும் மாணவ மாணவிகள் செல்லும் வழித்தடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கினால்  இது போன்ற விவரங்கள் ஏற்படாது. என சமூக ஆர்வலர்கள்  தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிக மக்கள் மாணவர்கள் செல்லும் வழித்தடங்களை ஆய்வு செய்து கூடுதல் பஸ்கள்  இயக்க மாவட்ட நிர்வாகத்திற்கு  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: