சாலை வசதி கேட்டு பொதுமக்கள் திடீர் மறியல்; பேரணாம்பட்டு அருகே பரபரப்பு

பேரணாம்பட்டு:  பேரணாம்பட்டு அருகே சாலை வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மொரசப்பள்ளி கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தில் இருந்து நலங்காநல்லூர் கிராமம் செல்லும் சாலையில் ஒரு கி.மீ தூரத்துக்கு தார்ச்சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலையின் இடையில் 100 மீட்டர் தூரத்தில் சாலை போடப்படவில்லை. இந்த சாலையுடன் சேர்த்து தனது விவசாய நிலத்துக்கான பட்டா உள்ளதால் சாலை போட அனுமதிக்க முடியாது என்று அங்குள்ள தனிநபர் ஒருவர் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதால் சாலை போடப்படவில்லை என்று தெரிகிறது. இதுதொடர்பாக அந்நபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சிக்கலால் மழைக்காலங்களில் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், கிராம மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

மேலும் சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அதேபோல் ஊருக்குள் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வருவதிலும் சிக்கலை சந்திக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் இப்பிரச்னைக்கு தீர்வு எட்டப்படாததால் வேதனையடைந்த கிராம மக்கள் நேற்று குடியாத்தம்- பேரணாம்பட்டு சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடம் சென்ற பிடிஓ, தாசில்தார் மற்றும் குடியாத்தம் எம்எல்ஏ அமுலு,  ஒன்றியக்குழு தலைவர் சித்ரா  மற்றும் அரசு அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் சாலை அமைத்து தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: