விருதுநகரில் பிரமாண்டமாக நடக்கிறது இன்று திமுக முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை

விருதுநகர்: விருதுநகரில் இன்று மாலை நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். விருதுநகர் - சாத்தூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில், பட்டம்புதூர் அண்ணா நகரில் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கலைஞர் திடலில், அண்ணா பிறந்த தினம், திமுக உதயமான தினம், தந்தை பெரியார் பிறந்த தினம் என திமுக முப்பெரும் விழா இன்று மாலை நடைபெற உள்ளது. முப்பெரும் விழாவில் தமிழகம் முழுவதுமிருந்து வரும் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கை வசதிகளுடன் கூடிய பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்ட எல்லை முதல் சாத்தூர் வரை 21 கிமீ தூரத்திற்கு திமுக கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. திமுக முப்பெரும் விழா மற்றும் விருது வழங்கும் விழா மாலை 4 மணிக்கு துவங்குகிறது. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் வரவேற்கிறார். முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் பாரதிதாசன் மற்றும் பேராசிரியர் விருதுகளை சம்பூர்ணம் சாமிநாதன், கோவை இரா.மோகன், டி.ஆர்.பாலு, புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசு, குன்னூர் சீனிவாசன் ஆகியோருக்கு வழங்கி திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் விழா பேருரையாற்றுகிறார். கலைஞர், தொண்டர்களுக்கு  முரசொலியில் எழுதிய 4,041 கடிதங்கள், 21,510 பக்கங்களை கொண்ட 54  புத்தகங்கள் அடங்கிய தொகுப்பினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். நிறைவாக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு நன்றி கூறுகிறார்.

Related Stories: