கொடநாடு காட்சி முனையை ரசிக்க குவியும் பயணிகள்-புதுப்பொலிவு ஏற்படுத்தப்படுமா?

கோத்தகிரி :  கோத்தகிரியில் கொடநாடு காட்சி முனையை ரசிப்பதற்காக நாளுக்குநாள் குவியும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதுப்பொலிவு ஏற்படுத்தப்படுமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களில் அதிகம் பயணிகளை கவர்ந்திழுப்பது கொடநாடு காட்சி முனை. இந்த காட்சி முனை பகுதி கோத்தகிரியில் இருந்து சுமார் 18 கிமீ தொலைவில் உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. கொடநாடு காட்சி முனை நீலகிரி மாவட்டத்தின் கடைக்கோடி காட்சி முனையாகவும் அமைந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா ஸ்தலங்களையும் கண்டு களித்துவிட்டு சமவெளி பகுதிகளுக்கு செல்லும்போது கோத்தகிரி வழியாக வந்து கொடநாடு காட்சி முனை இயற்கை அழகை கண்டு களித்து செல்வர். இங்கு பயணிகளுக்காக தொலைநோக்கி மையம், காட்சி பாதுகாப்பு வளையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

தெங்குமரஹாடா கிராமத்தின் தோற்றம், பவானிசாகர் அணை காட்சி, ராக் பில்லர் ஆகியவற்றை காண அதிக அளவு சுற்றுலா பயணிகள் நாளுக்குநாள் குவிகின்றனர்.

ஆண்டு தோறும் கோடை காலங்களில் மட்டுமே களைகட்டும் கோடநாடு காட்சி முனை பகுதி, தற்போது விழாக்கால விடுமுறை, வார விடுமுறை நாட்களிலும் களைகட்டி வருகிறது.

வார விடுமுறை நாட்களில் தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கூடுகின்றனர். இங்கு சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் டூவீலர், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்களில் வருகின்றனர்.

இந்நிலையில், காட்சி முனை தொலைநோக்கி இல்லத்தில் உள்ள தொலைநோக்கி கருவிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். வாகனம் பார்க்கிங் செய்ய அதிக இடப்பரப்பு ஒதுக்க வேண்டும். அரசு பேருந்து திரும்பும் இடத்தில் தற்போது பார்க்கிங் ஒதுக்கப்பட்டுள்ளதால் இடப்பற்றாக்குறை நிலவுகிறது. மேலும் தற்போது 2வது சீசன் தொடங்கியுள்ள நிலையில் அதிக சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையடுத்து மேற்கண்ட வசதிகளை ஏற்படுத்தி, கொடநாடு காட்சி முனையை புதுப்பொலிவுடன் மாற்ற வேண்டும். இதன்மூலம் தின்பண்டங்கள், நொறுக்கு தீனி, பழங்கள் வியாபாரம் பெருகி பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: