உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் விதமாக பொது இடங்களில் கட்சி பேனர் வைக்க தடை-காவல்துறை எச்சரிக்கை

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் நடந்த அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் விதமாக பொது இடங்களில் கட்சி பேனர் வைக்கக்கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நெல்லிக்குப்பம்  காவல் நிலையத்தில் உயர் நீதிமன்ற  உத்தரவின்படி பொது இடங்கள் மற்றும்  பள்ளி, கல்வி நிறுவனங்கள் அருகில் விளம்பரப் பதாகைகள் வைக்க தடை  விதித்துள்ளது. இதனை அமல்படுத்தும் விதமாக நெல்லிக்குப்பம் காவல்  நிலையத்தில் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் மற்றும் திருமண மண்டப  உரிமையாளர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.  காவல் ஆய்வாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். உதவி காவல்  ஆய்வாளர் சந்திரவேல், தனிப்பிரிவு சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள்  தண்டபாணி, மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.  

கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன்  பேசுகையில்: உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும்விதமாக இனி பொது  இடங்களில் கட்சிகள் சார்ந்த டிஜிட்டல் பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும்.  திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்காக திருமண மண்டபங்கள் உள்ள  தெருக்களில் டிஜிட்டல் பேனர்கள் வைக்க கூடாது. சுப நிகழ்ச்சியின்போது  திருமண மண்டபத்திற்கு முன்பு ஒரு நாள் மட்டும் ஒரு சில டிஜிட்டல் பேனர்கள்  வைக்க அனுமதிக்கப்படும். நிகழ்ச்சி முடிந்த மறு தினமே பேனர்களை உடனடியாக  அகற்ற வேண்டும். கட்சி சார்ந்த விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டால் கட்சி  அலுவலகத்திற்கு முன்பு ஒரு நாள் மட்டும் வைக்க வேண்டும். மறுநாள் விளம்பர  பதாகைகள் அகற்றப்பட வேண்டும் என பேசினார். காவல்  ஆய்வாளரின் கருத்தை கூட்டத்திற்கு வந்த அனைவரும் ஏற்றுக்கொள்வதாக  தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் தி.மு.க நகர செயலாளர் மணிவண்ணன், அ.தி.மு.க  நகர செயலாளர் காசிநாதன், காங்கிரஸ் நகர தலைவர் ரவிக்குமார், வி.சி.க நகர  செயலாளர்கள் திருமாறன், புலிக்கொடியான், த.வ.க. நகர செயலாளர் கார்த்திக்,  அ.ம.மு.க நகர செயலாளர் சிவக்குமார், பா.ம.க முன்னாள் மாவட்டத் துணைத்  தலைவர் சுப. கதிரவன், நகர செயலாளர் பிரபு, வர்த்தக சங்க செயலாளர்  ராமலிங்கம், மாவட்ட இணை செயலாளர் சுரேஷ், மேல்பட்டாம்பாக்கம் வர்த்தக சங்க  செயலாளர் சம்சுதீன், வரக்கால்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் மற்றும் இஐடி பாரி அலுவலர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட  பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: