எதிர்காலத்தில் சுங்கச்சாவடிகள் இருக்கவே இருக்காது: கட்கரி தகவல்

புதுடெல்லி: எதிர்காலத்தில் எங்குமே சுங்கச் சாவடிகள் இல்லாத வகையில் புதிய திட்டத்தை கொண்டு வர இருப்பதாக ஒன்றிய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லியில் இந்திய-அமெரிக்க வர்த்தக சங்க நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:இந்தியாவில் பொது போக்குவரத்து முறையை மின்சார மயமாக்க அரசு விரும்புகிறது. அதே போல் மின்சார நெடுஞ்சாலைகளை அமைக்கும் திட்டம் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி நெடுஞ்சாலைகள் சூரிய சக்தியால் இயக்கப்படும். இவை கனரக வாகனங்கள், பஸ்களை இயக்கும்போது சார்ஜ் செய்வதற்கு வசதியாக இருக்கும்.

இதுமட்டுமின்றி, ஒன்றிய போக்குவரத்துத் துறை ஒரு முன்னோடி திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. கட்டணம் செலுத்துவதற்காக சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் நிறுத்தாமல் செல்வதற்காக ‘தானியங்கி நம்பர் பிளேட் ரீடர் கேமராக்கள்’ பொருத்தப்பட உள்ளன. இதன்மூலம், கட்டணச் சாலைகளில் வாகனத்தில் செல்பவர்கள், அவர்கள் செல்லும் தூரத்தை ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் கணக்கிடப்பட்டு, உரிமையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக பணம் எடுத்துக் கொள்ளப்படும். இதன்மூலம், சுங்கச் சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும்.

கடந்த 2018-2019ம் ஆண்டுகளில் சராசரியாக ஒரு சுங்கசாவடியை கடந்து செல்ல 8 நிமிடங்கள் ஆனது. ஆனால், ஃபாஸ்ட் டேக் திட்டம் கொண்டு வந்த பிறகு ஒரு சுங்கச்சாவடியை கடக்கும் நேரமானது 47 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டம் அறிமுகமானால், எதிர்காலங்களில் சுங்கச் சாவடிகளே இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: