தண்டவாளத்தில் மரம் விழுந்தது ஊட்டி-குன்னூர் சிறப்பு மலை ரயில் ரத்து

ஊட்டி: பலத்த காற்று காரணமாக தண்டவாளத்தில் ராட்சத கற்பூர மரம் விழுந்ததால் ஊட்டி-குன்னூர் இடையே சிறப்பு மலைரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையம் வரை 44 கிலோ மீட்டர் தூரம் மலைரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதே போல் குன்னூர்- ஊட்டி இடையே மலைரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது நீலகிரியில் 2வது சீசன் துவங்கி உள்ளதால் மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஊட்டியில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலை வீசிய பலத்த காற்று காரணமாக கேத்தி-லவ்டேல் இடையே மலைரயில் பாதையில்  ராட்சத கற்பூர மரம் விழுந்தது. இதனால் குன்னூர்-ஊட்டி இடையே மலைரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக இன்று காலை 7.45 மணிக்கு குன்னூரில் இருந்து ஊட்டி புறப்படும் சிறப்பு மலைரயில், அதே போல் ஊட்டியில் இருந்து காலை 9.15 மணிக்கு குன்னூருக்கு புறப்படும் சிறப்பு மலைரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Related Stories: