முத்துப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பழைய பள்ளி கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்-பெற்றோர்கள் கோரிக்கை

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருவதால் வளாகத்தில் உள்ள பழமையான பள்ளி கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்று பகுதி கிராமங்களை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

மிகவும் பின்தங்கிய பகுதியை சேர்ந்த மக்களின் குழந்தைகள் படிக்கும் இந்த பள்ளி போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. மிகப்பெரிய பரப்பளவு கொண்ட இந்த பள்ளியில் 1997ம் ஆண்டு கட்டப்பட்ட நாட்டு ஓட்டு வகுப்பறை கட்டிடம், அதன் பின்னர் கட்டப்பட்ட ஆஸ்பெட்டாஸ் சீட் வகுப்பறை கட்டிடம், அதேபோல் சமீபத்தில் கட்டப்பட்ட சிலாப் கட்டிடம் ஆகியவைகளில் இயங்கிய நிலையில் அவைகள் பழுதடைந்த நிலைக்கு போனதால் 2010ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது மூன்று மாடிகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

அதனால் அனைத்து வகுப்புகளும் இந்த கட்டிடத்தில் இயங்க துவங்கியது. இதனால் இந்த பழைமையாகவும் பழுதடைந்த நிலையிலும் இருந்த பள்ளி கட்டிடங்கள் கடந்த 2018ம் ஆண்டு கஜா புயலில் முழுமையாக சேதமாகியது. இதனால் இந்த கட்டிடங்கள் பயன்படுத்த முடியாமல் போனதால் தற்போது பயனற்று கிடப்பதுடன் அதில் கழிவு பொருட்கள் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் பள்ளி விளையாட்டு நேரம் மற்றும் ஓய்வு நேரத்தில் மாணவர்கள் அங்குமிங்கும் ஒட்டி விளையாடும் போது இப்பகுதியில் அதிகளவில் நடமாடுவதால் அவர்களுக்கு மிகவும் இந்த கட்டிடம் இடையூறாகவும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது.

இந்த கட்டிடங்களில் ஒன்றில் பள்ளியில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மரம் மற்றும் இரும்பு பெஞ்சுகள் மற்றும் புதியதாக வரப்பட்ட இரும்பு பெஞ்சுகள் நூற்றுக்கணக்கானவை இதில் பாதுக்காப்பாக வைக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த கஜா புயலில் இந்த கட்டிடத்தில் மேல்கூரை சேதமாகி வானமே கூரையாக மாறியதால் மழைக்காலத்தில் தண்ணீர் பட்டு அனைத்து பெஞ்சுகளும் துருப்பிடித்த நிலையில் பயன்படுத்த முடியாதளவில் மாறி வருகிறது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு இங்கு படிக்கும் மாணவர்கள் நலன் கருதி இந்த பள்ளி வளாகத்தில் உள்ள பழமையான கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும், அதேபோல் இந்த கட்டிடத்தில் வைக்கப்பட்ட மாணவர்கள் அமரும் பெஞ்சுகளை மீட்டு எடுத்து பாதுக்காப்பாகவும் அல்லது பெஞ்சுகள் இல்லாத மற்ற பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களுக்கும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: