அதிகபாரம் ஏற்றிச்சென்ற 9 டாரஸ் லாரிகள் பறிமுதல்: போலீசார் நடவடிக்கை

நாங்குநேரி: நாங்குநேரியில் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக கல் பாரம் ஏற்றி வந்து சாலைகளை சேதப்படுத்திய லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில்  உள்ள கல்குவாரியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான டாரஸ் லாரிகள் கல் ஏற்றிக் கொண்டு நாங்குநேரி தாலுகா சிந்தாமணி, முனைஞ்சிப்பட்டி, மூலைக்கரைப்பட்டி வழியாக நாகர்கோவிலுக்கு செல்கின்றன. அவற்றில் பெரும்பாலான லாரிகள் அனுமதிக்கப்பட்ட அளவுகளை விட இரு மடங்கு எடையுள்ள கற்களை ஏற்றிக் கொண்டு செல்வதால் கிராமப்புற சாலைகள் பாதிக்கப்பட்டு குண்டும் குழியுமாக உள்ளன. இதனால் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளுக்கு இயக்கப்படும் வாகனங்களும் சாலையில் மிகுந்த சிரமத்திற்கு இடையே பயணிக்கின்றன.

இந்த டாரஸ் லாரிகளால் குறுகிய சாலைகள்  சேதமடைந்த நிலையில் இருப்பதால் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகின்றன. இது குறித்து தொடர்ந்து புகார் அனுப்பியும் நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படாததால் உன்னங்குளம், மூலைக்கரைப்பட்டி, அம்பலம், சிந்தாமணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் அவ்வப்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதும் அவர்களை சமாதானப்படுத்துவதும் வாடிக்கையாக நடந்து வருவதால் போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.

 

இந்நிலையில் நாங்குநேரி இன்ஸ்பெக்டர் செல்வி, எஸ்ஐக்கள் சங்கர், ஆழ்வார் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அளவுக்கு அதிகமாக கற்களை ஏற்றி வந்த 9 லாரிகளை மடக்கி பிடித்தனர்.  அவற்றை அங்குள்ள தனியார் எடை நிறுவனத்தில் சோதித்த போது அவை பெரும்பாலும் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலான அளவில் கற்கள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து   அந்த லாரிகளைப் பறிமுதல் செய்ததுடன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: