தமிழகத்தில் ஒரே ஆண்டில் மட்டும் 300 கோயில்களில் கும்பாபிஷேகம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

ஈரோடு: தமிழகத்தில் ஒரே ஆண்டில் 300 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர்பாபு கூறினார். ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறவுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று கும்பாபிஷேக பணிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த 2008ம் ஆண்டு துவங்கப்பட்ட கோயில் திருப்பணி பல ஆண்டுகளாக நடைபெறாத நிலையில், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வரின் உத்தரவுக்கிணங்க கடந்தாண்டு ஜூலையில் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இப்போது கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த வருடம் தமிழ் வருட பிறப்புக்கு முன் சுமார் 300 கோயில்களின் திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் 300 கோயில்களின் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருப்பது இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இதுதான் முதல் முறை.

தமிழகம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஆகம விதிகளின்படி 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருவட்டாறு கோயிலுக்கும் கூட திருப்பணிகளை விரைவில் முடித்து கும்பாபிஷேகம் நடத்திய ஆட்சி, திமுக ஆட்சியாகும். முன்னாள் முதல்வர் கலைஞர் பல்வேறு சட்ட போராட்டங்களுக்குப் பின்னர் கொண்டு வந்த அன்னைத் தமிழில் வழிபாடு எனும் திட்டத்தை முழுமையாக அமல்படுத்திட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி  அன்னை தமிழில் அர்ச்சனை எனும் பதாகையை திறந்து வைத்து, 14 போற்றிப் புத்தகங்களையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அர்ச்சனை தொகையில் 60 சதவீதத்தை அர்ச்சகர்களுக்கே வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார். இவையெல்லாம் தமிழில் அர்ச்சனை செய்வதற்கு உந்து சக்தியாக அமைந்துள்ளது.

தற்போது பெரும்பாலான கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படுகிறது. தமிழில் அர்ச்சனை செய்யப்படாத கோயில்கள் குறித்து கவனத்துக்கு கொண்டு வரப்பட்டால் அங்கும் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுவரை சுமார் 2 ஆயிரம் கோடிக்கும் மேல் மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தப் பணி மேலும் தொடரும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Stories: