உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா ரூ.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்; திருத்தணி எம்.பூபதி அறிவிப்பு

திருத்தணி: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் மற்றும் இளைஞர் அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் திருத்தணியில் நடைபெற்றது.

இதில் மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன் மற்றும் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் வினோத்குமார் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, `ஒவ்வொரு இளைஞரணி அமைப்பாளர்கள் ஒவ்வொரு ஊராட்சிகளிலும், கிளைகளிலும் நேரடியாக வீடு தோரும் சென்று உறுப்பினர்கள் சேர்த்து நாம் மாவட்டத்தில் முதலிடம் பெற்று பரிசுகள் பெற வேண்டும். அதற்கான முயற்சிகளை நீங்கள் செய்ய வேண்டும். மத்தியில் ஆளும் பாஜவினர் தமிழ்நாட்டில் வேரூன்ற வேண்டும் என்று நினைக்கின்றனர். அது ஒருபோதும் வேலைக்காகாது. திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் வரை தமிழ்நாட்டில் பாஜவால் காலூன்ற முடியாது.

இதற்கு காரணம் நாம் திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. எனவே ஒவ்வொரு ஊராட்சி ஒவ்வொரு கிளையிலும் அனைவரும் கொடியேற்றி அதனை வாட்ஸ்அப்பில் வெளியிட வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் திருத்தணி சட்டமன்ற தொகுதி தான் அதிக வாக்கு பெற்று வெற்றி பெற செய்த வைத்தது என்ற பெருமையை கிடைக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’ என்றார். மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி பேசும்போது, `மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாள் விழாவை முன்னிட்டு என்னுடைய சொந்த செலவில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஏழை, எளிய மக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். மேலும் படிக்கிற பெண் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள், கணினி, லேப்டாப், கல்விக்கட்டணம், கல்வி உபகரணங்களை வழங்கப்படும்’ என்றார்.

கூட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். விருதுநகரில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் அதிக அளவில் பங்கேற்பது, அண்ணா பிறந்தநாள் விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது, மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏழை எளியவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கோலாகலமாக கொண்டாடுவது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: