கடந்த தேர்தலில் தோல்வியடைந்த 144 தொகுதிகளையும் கைப்பற்ற பாஜ வியூகம்: அமித் ஷா, நட்டா தலைமையில் ஆலோசனை

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த 144 தொகுதிகளை கைப்பற்ற வியூகம் அமைக்கும் பணிகளை பாஜ நேற்று தொடங்கியது. பாஜ 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 303 தொகுதிகளை கைப்பற்றி கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், கடந்த தேர்தலில் தோல்வியடைந்த 144 தொகுதிகள் மற்றும் தற்போது சிக்கலில் உள்ள ஏற்கனவே வெற்றி பெற்ற சில தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்ய வியூகம் அமைக்கும் பணி பாஜ தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்று நடந்தது.இக்கூட்டத்தில் பூபேந்தர் யாதவ், கிரிராஜ் சிங், ஸ்மிருதி இரானி, பர்ஷோத்தம் ரூபலா, கஜேந்திர சிங் ஷெகாவத் உள்பட 25 ஒன்றிய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

அப்போது, கடந்த மக்களவை தேர்தலில் பாஜ தோல்வி அடைந்த 144 தொகுதிகளில் பாஜ.வின் பலம், பலவீனம், வெற்றி வாய்ப்பு மற்றும் கட்சிக்குள்ள அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட கள நிலவரம் குறித்து அமைச்சர்கள் தயாரித்த தகவல் அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டன. இந்த அறிக்கையில் தொகுதியின் மதம், சாதி, வாக்கு குறைந்ததற்கான காரணங்கள் பற்றிய தகவல்களும் பகிரப்பட்டுள்ளன. இதையடுத்து, இந்த 144 தொகுதிகளும் பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் ஒரு ஒன்றிய அமைச்சர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு குழு அமைச்சர்கள் இந்த நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளுக்கு சென்று கள நிலவரத்தை ஆய்வு செய்ய மேற்கு வங்கம், தெலங்கானா, மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

Related Stories: