ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர்வுநாள் கூட்டம் தீபாவளி போனஸாக ஒருமாத ஊதியம் வழங்க வேண்டும்-மக்களை தேடி மருத்துவம் சங்க ஊழியர்கள் கோரிக்கை

ராணிப்பேட்டை : தீபாவளி பண்டிகைக்கு ஒருமாத ஊதியம் போனஸாக வழங்க வேண்டும் என்று மக்களை தேடி மருத்துவம் சங்க ஊழியர்கள் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்வுநாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வுநாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின்பேரில் டிஆர்ஓ குமரேஷ்வரன், கலால் உதவி ஆணையர் சத்யபிரசாத், கலெக்டர் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர்.

பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும், என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். மொத்தம் 240  மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில், மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:  தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தன்னார்வலர்கள் என்ற முறையில் தமிழகம் முழுவதும் 11 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட்டு இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2 மணி நேர பணிக்கு ₹4,500 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. வீடு, வீடாக சென்று மருந்து வழங்குவது, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் கண்டறிதல், தொற்றுநோய் கண்டறிதல், இவை அனைத்தும் ஆன்லைனில் பதிவு செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

எங்களது கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றம் வேண்டும். காலத்திற்கு ஏற்ற ஊதிய உயர்வு வேண்டும். பணி நேரத்தை நிர்ணயம் செய்து முழுநேர ஊழியராக்க வேண்டும். தீபாவளி பண்டிகை கால செலவிற்கு ஒருமாத ஊதியம் வழங்க வேண்டும். ஊதியத்தை வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும். அரசு விடுமுறை நாட்களை விடுப்பாக கருத வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், மேல்விஷாரம் நேஷ்னல் வெல்பேர் அசோசியேஷன் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: மேல்விஷாரம் நகராட்சி எல்லைக்கு  உட்பட்ட நெடுஞ்சாலையின் இருபுறமும் கடைகள் மற்றும் சாலை வியாபாரிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகன போக்குவரத்துக்கு மிகவும் சிரமமாக உள்ளது. மேலும், நடந்து செல்வோரும் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். எனவே, நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், மேல்விஷாரம் நகராட்சிக்கு உட்பட்ட ஜமிலாபாத், மார்கபந்து நகர் பகுதிக்கு இடையே கானாறு உள்ளது. இந்த கானாற்றின் மீது கல்தூண்கள் வைத்து பாதையாக அமைத்து அப்பகுதி மக்கள் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் சென்று வருகின்றனர். சீரான பாதை இல்லாததால் மேல்விஷாரம் கத்தியவாடி சாலை மற்றும் கையும்நகர் சாலையை பயன்படுத்த வேண்டியுள்ளது. இல்லையெனில், மார்கபந்து நகர், கீழ்விஷாரம் வழியாக 2 கிமீ சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதனால், பெண்கள், முதியோர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டோர் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். இந்த ஒத்தையடி பாலத்தின் வழியாக பள்ளி மாணவர்கள் ஆபத்தான நிலையில் கடந்து செல்கின்றனர்.

எனவே, ஜமிலாபாத் 3வது தெரு- மார்கபந்து நகர் பகுதிகளுக்கு இடையே உள்ள கானாற்றின் மீது சிறுபாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மேலும், நாம் தமிழர் கட்சி வாலாஜா மேற்கு ஒன்றிய தலைவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் விசி மோட்டூர் பகுதியில் வசித்து வருகிறேன். விசி மோட்டூர் ஊராட்சியில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியை சுற்றிலும் புதர் மண்டிக்கிடக்கிறது. பள்ளி சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: