கிருஷ்ணகிரி அருகே 17 ஆண்டுக்கு பிறகு நிரம்பிய ஏரி-விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே 17 ஆண்டுக்கு பிறகு ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி அருகே மேகலசின்னம்பள்ளி ஊராட்சியில் கரகூர், கோதிகுட்லப்பள்ளி, விவேக் நகர், பி.சி.புதூர், மாட்டுஓணி, பிசி ராமன்கொட்டாய் உட்பட 12 கிராமங்கள் உள்ளன. மேகலசின்னம்பள்ளி கிராமத்தில் இருந்து வள்ளூவர்புரம் செல்லும் சாலையில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மூலம் ஆயிரக்கணக்கான நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. இந்த ஏரிக்கு ஆந்திரா மாநில எல்லையோரங்களில் பெய்யும் மழை மற்றும் ஏக்கல்நத்தம் மலையில் இருந்து வரும் மழைநீர், நாரலப்பள்ளி, பெரியசக்னாவூர், சிந்தகம்பள்ளி, கோதிக்குட்லப்பள்ளி வழியாக வருகிறது. குறிப்பாக மகாராஜகடை அருகே உள்ள அங்கனாமலை பகுதியில் இருந்து வரும் மழை நீரும் இந்த ஏரிக்கு தான் வருகிறது.

இந்நிலையில், கடந்த 17 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், இந்த ஏரி நீரின்றி முற்றிலும் வறண்டது. இதனால், விவசாயம் செய்ய முடியாமல் பலர் வேலை தேடி பெங்களூரு, திருப்பூர், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று விட்டனர். இந்நிலையில், தொடர் மழையால் தற்போது ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், மீண்டும் விவசாய பணிகளில் கிராம மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: