கன்னியாகுமரியில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நிறைவு; காந்திமண்டபத்தில் இருந்து செப்.7ல் ராகுல் நடைபயணம்: மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி வழங்கி தொடங்கி வைக்கிறார்

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்தில் இருந்து செப்டம்பர் 7ம் தேதி ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்குகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயணத்தை தேசியக்ெகாடி வழங்கி தொடங்கி வைக்கிறார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடா யாத்ரா’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை வரும் செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகே இருந்து தொடக்குகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தேசிக்கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி பயணத்தை தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து அங்கு நடைபெறுகின்ற பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி மற்றும் தலைவர்கள் கலந்துகொண்டு பேசுகிறார்கள். குமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7ம் தேதி தொடங்கி 8, 9, 10 தேதிகளில் நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல்காந்தி செப்டம்பர் 11ம் தேதி காலை கேரளா மாநிலம் செல்கிறார். கன்னியாகுமரியில் நடைபெறுகின்ற பொதுக்கூட்டம் மற்றும் நடைபயண ஏற்பாடுகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேரில் ஆய்வு செய்து வருகிறார். நேற்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், முன்னேற்பாடு பணிகளை கேட்டறிந்தார்.

கன்னியாகுமரி கடற்கரை சாலையில் செப்டம்பர் 7ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இதற்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நடக்கிறது. மேடையில் 150 பேர் அமரும் வகையில் 82 அடி நீளத்தில் அமைக்கப்படுகிறது. இந்த மேடை அமைக்கும் பணிகள் இன்று நிறைவு பெறுகிறது. மேலும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் 25 ஆயிரம் பேர் பங்கேற்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி வருகை தருகின்ற ராகுல்காந்தி தனி படகில் சென்று திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவிடம், காமராஜர் நினைவிடம் ஆகியவற்றுக்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.

அதன் பின்னர் காந்தி மண்டபத்தில் மரியாதை செலுத்திவிட்டு அங்கிருந்து ராகுல்காந்தி நடை பயணத்தை ெதாடங்கும் முன்னதாக மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் ராகுல்காந்திக்கு கதர் ஆடையை வழங்க இருக்கிறார். பின்னர் அங்கிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி வழங்கி நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார். இதற்காக அன்று காலை 11 மணிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி வருகை தர உள்ளார். நடைபயணத்தை தொடங்கி வைத்த பின்னர் அங்கிருந்து திருநெல்வேலி புறப்பட்டு செல்கிறார்.

இதற்கிடையே குமரி மாவட்டத்தில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று இரண்டாம் நாளாக ஆய்வு மேற்கொண்டார். கன்னியாகுமரியில் மேடை அமைக்கும் பகுதியை பார்வையிட்டார். அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: