கூடலூர் கோத்தர் வயலில் இரவில் குடியிருப்பை முகாமிடும் காட்டுயானை

கூடலூர் : கூடலூர் கோதர்வயல் பகுதியில் கடந்த ஒரு வாரமாக காட்டுயானை இரவு நேரத்தில் முகாமிட்டுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் நடமாட வேண்டாம் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்டது கோதர்வயல். இந்த பகுதியையொட்டி முதுமலை, கூடலூர் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் வசிக்கின்றன. அவ்வப்போது சில யானைகள் குடிநீர் மற்றும் உணவு தேடி ஊருக்குள் நுழைந்து விடுகிறது.கூடலூர் நகராட்சி 5-வது வார்டுகுட்பட்ட இந்த கோதர்வயலில் காய்கறிகளே அதிகம் பயிரிடப்படுகின்றன. சிலர் வாழை, தென்னையை வளர்த்து வருகிறார்கள்.

இந்த பகுதிகளில் பலா மரங்கள் பரவலாக உள்ளன. எனவே வாழை, தென்னை மற்றும் பலா பழங்களை ருசிக்க காட்டுயானை ஒன்று கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் நடமாடுகிறது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடியிருப்புவாசிகள் இது குறித்து கூடலூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம்.

 அதிகாலையில் நடை பயிற்சி செல்லும்போது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று வனத்துறை பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. யானை குடிருப்புக்குள் நுழைந்துவிடாமல் தடுக்க வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.முகாமிட்டுள்ள காட்டுயானையை அடர்ந்து வனத்துக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: