இந்து முன்னணி சார்பில் மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம்

கோத்தகிரி : இந்து முன்னணி சார்பில் கோத்தகிரியில் விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நடந்தது.கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் 147 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் சிறப்பு அழைப்பாளர் சிங்கை பிரபாகரன் பங்குபெற்ற சிறப்பு பொதுக்கூட்டம் டானிங்டன் பகுதியில் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்று, மேலும்  அனைத்து பகுதிகளிலும் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 64 பெரிய சிலைகளும் 83 சிறிய சிலைகளும் விஜர்சன விழாவில் பங்கேற்றன.

பிற்பகல் 2 மணியளவில் மாவட்ட பொறுப்பாளர்கள் சுந்தர், ரமேஷ், பிரகாஷ், ஜெயராமன், கார்த்திக், ரமேஷ் குட்டன், ராஜிவ் குட்டன், விக்கி ஆகியோர் கலந்து கொண்டு அனைத்து சிலைகளும்  டானிங்டன் பகுதியில் ஒன்றினைக்கப்பட்டு ஊர்வலம் தொடங்கியது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நகரின் பிரதான வீதிகளான டானிங்டன், காமராஜர் சதுக்கம், மார்க்கெட், பஸ் நிலையம், மாரியம்மன் கோவில், பஜார், காம்பாய்கடை, ராம்சந்த  வழியாக ஊர்வலம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாஜ பொறுப்பாளர்கள் குமார், அன்பு, ராமச்சந்திரா ரெட்டி, குணசீலன் ஆகியோர் மற்றும் இந்து முன்னணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ராம்சந்த் வழியாக ஊர்வலம் சென்று உயிலட்டி நீர்வீழ்ச்சி பகுதியில்  அமைக்கப்பட்ட நீர்த்தேக்கத்தில் கரைக்கப்பட்டன.குன்னூர்: குன்னூரில், 71 விநாயகர் சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது.நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இதே போன்று வீடுகளிலும், கோயில்களிலும் விநாயகருக்கு படையலிட்டு விநாயகரை மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக குன்னூர் தாலுகாவில் 70 இடங்களில் இந்து முன்னணி சார்பில் பல்வேறு வடிவங்களிளான சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.   இதே போன்று  மாடல்ஹவுஸ், எம்ஜிஆர் நகர், கிருஷ்ணாபுரம், காந்திபுரம், பஸ் நிலையம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று மாலை பலத்த பாதுகாப்புடன் விஜர்சன ஊர்வலம் நடைபெற்றது. குன்னூர் பகுதியில் உள்ள சிலைகளை லாஸ் அருவியில் கரைக்க ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

சிம்ஸ் பூங்காவில் இருந்து இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. லாலி மருத்துவமனை வழியாக பள்ளி வாசல், பஸ் நிலையம் வரை ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலத்தில் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள்கலந்து கொண்டனர். பின்னர் விநாயகர் சிலைகளை கரைக்க லாஸ் அருவி கொண்டு செல்லப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கூடலூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி அமைப்பு சார்பில் கூடலூர் முழுவதுமாக 96 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டனர். இந்த சிலைகள் நேற்று கூடலூர் நகரில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கள்ளிக்கோட்டை சாலை இரும்பு பாலம் பகுதியில் உள்ள பாண்டியாற்றில் கரைக்கப்பட்டன. நேற்று பகல் 2 மணியளவில் கூடலூர் நகராட்சி அலுவலகம் வளாகத்தில் துவங்கிய பேரணிக்கு இந்து முன்னணியின் மாவட்ட செயலாளர் தினேஷ் குமார் தலைமையில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊர்வலம் கூடலூர் பழைய பஸ் நிலையம், சுங்கம், தாலுகா அலுவலகம், காந்தி சிலை வழியாக கள்ளிக்கோட்டை சாலை வந்து அடைந்து அங்கிருந்து சென்றடைந்தது. விநாயகர் சிலை ஊர்வலம் அமைதியான முறையில் நடைபெற்றது. பாதுகாப்பு பணிகளுக்காக கூடலூர் டிஎஸ்பி மகேஷ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

பந்தலூர்: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளான பந்தலூர், உப்பட்டி, தேவாலா, கொளப்பள்ளி ,சேரம்பாடி, எருமாடு, அய்யன்கொல்லி, நெலாக்கோட்டை, பிதர்காடு, பாட்டவயல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் 87 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து கடந்த 4 நாட்களாக பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வந்தனர்.

 இந்நிலையில் நேற்று சுற்றுவட்டார பகுதியில் வைக்கப்பட்டிருந்த அனைத்து விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக பந்தலூர் ரிச்மண்ட் மாரியம்மன் கோவில் பகுதிக்கு எடுத்துவரப்பட்டு அங்கிருந்து விஜர்சனம் செய்வதற்காக பந்தலூர், தொண்டியாலம், உப்பட்டி  வழியாக லாரிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பொன்னானி ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அமைப்பினர் செய்திருந்தனர். தேவாலா டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.  ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related Stories: