மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வழங்காவிட்டால் என்எல்சி நிறுவனத்திற்கு பூட்டு போடுவோம்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

நெய்வேலி: நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தை கண்டித்து பாமக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி பேசியதாவது:

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் வளர்ச்சிக்காக நெய்வேலி மற்றும் சுற்றி உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடு நிலங்களை கொடுத்தனர். ஆனால் இதுநாள் வரையில் அவர்களுக்கு உரிய இழப்பீடும், நிரந்தர வேலையும் வழங்காமல் என்எல்சி நிறுவனம் துரோகம் செய்துள்ளது. குறிப்பாக என்எல்சி சமீபத்தில் நடத்திய 293 பொறியாளர்கள் தேர்வில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லாதது மிகவும் வேதனை அளிக்கிறது.

நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி மூலம் ஆண்டுக்கு ரூபாய் 10,662 கோடி வருவாய் கிடைக்கிறது. மேலும் நிலத்தடிநீரை உறிஞ்சி கடலூருக்கு அனுப்புவது, மழைக்காலங்களில் வெள்ளநீரை வெளியில் தள்ளி பயிர்களை மூழ்கடிப்பது போன்ற செயல்களை இந்நிறுவனம் தொடர்ச்சியாக செய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டதால் கடலூர் மாவட்டம் முழுவதும் தண்ணீர் உப்பு தண்ணீராக மாறி வருகிறது.

மேலும் கடலூர் மாவட்டத்தின் வாழ்வாதாரத்தினை அழிக்கும் என்எல்சி நிறுவனம் உடனடியாக வெளியேற வேண்டும். அவர்கள் மண்ணின் மைந்தர்களுக்கும் பொறியாளர்களுக்கும் வேலைவாய்ப்பு மற்றும் இழப்பீடு வழங்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக நேரடியாக என்எல்சி தலைமை அலுவலகத்திற்கு பூட்டு போடப்படும். தொடர்ச்சியாக தமிழர்களை புறக்கணிக்கும் என்எல்சி நிர்வாகத்திற்கு பூட்டு போடுவதற்காக தற்போது தற்காலிகமாக பூட்டு கொண்டு வந்திருக்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: