பழனிசெட்டிபட்டியில் சாலையை கடக்க சென்டர் மீடியனில் போதிய திறவிடங்களை ஏற்படுத்த வேண்டும்; கலெக்டரிடம் கோரிக்கை மனு

தேனி: தேனி அருகே உள்ளது பழனிசெட்டிபட்டி பேரூராட்சி. இப்பகுதியில் செல்லும் சாலையின் நடுவே சுமார் ஒரு அடி உயரம் உள்ள தரைமட்ட மைய தடுப்புச்சுவர் இருந்தது. இதனை சுமார் 4 அடி உயரம் உள்ள மைய தடுப்புச்சுவராக மாற்றும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டுள்ளது. மாற்றி அமைக்கப்படும் மைய தடுப்பு சுவரில், கொட்டக்குடி பாலத்தில் இருந்து போடி விலக்கு வரை 15 இடங்களில் வாகனங்கள் சாலையை கடக்கும் வகையில் வழி இருந்தது. ஆனால் தற்போது அமைக்கப்படும் மைய தடுப்புச்சுவரால் குறைந்த எண்ணிக்கையில் சாலை திறவிடங்கள் அமைக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டுனர்கள், நடைபாதை பயணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி கலெக்டர் முரளீதரனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில், தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் பழனிசெட்டிபட்டியில் சாலை மைய தடுப்புச்சுவர் அமைத்து வருகிறது. இதில் சாலை திறவிடங்கள் மிக குறைந்த எண்ணிக்கையில் அமைக்கிறது. இதனால் விபத்துக்கள் ஏற்படவும், பாதசாரிகள் நீண்ட தூரம் வந்து சாலையை கடக்க வேண்டிய நிலையும் உள்ளது. எனவே மைய தடுப்புச்சுவர் அமைக்கும் போது போதிய அளவில் சாலையை கடக்க வசதியாக சாலை திறவிடங்களை ஏற்படுத்த வேண்டும். சாலையில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories: