பஞ்சு விலையை குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை: திருப்பூரில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

திருப்பூர்: பஞ்சு விலையை குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். ஒன்றிய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று திருப்பூரில் தொழில்துறையினருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: திருப்பூரில் இருந்து பலர் பல்வேறு பிரச்னைகளுக்காக டெல்லி வருகிறார்கள். ஆனால் ஒருவர்கூட தனிப்பட்ட பிரச்னைக்கு வருவதில்லை. ஒட்டுமொத்த பின்னலாடை தொழிலுக்காக மட்டும்தான் வருகிறார்கள். இது மிகவும் ஆச்சரியம் அளிக்கம் வகையில் இருக்கிறது.

 

பஞ்சு விலை உயர்வு குறித்து பலரும் தெரிவித்து வருகிறார்கள். ஒன்றிய அரசு பஞ்சு விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கையும் எடுத்துள்ளது. ஆன்லைன் வர்த்தகம் மூலம் பஞ்சு விலை உயர்த்தப்படுவதாக புகார்கள் வந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.  தொழில்துறையினருக்கு எப்போதும் ஒன்றிய அரசு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து எல்.முருகன் அளித்த பேட்டி: இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆளுநருக்கு அதிகாரத்தை வழங்கி உள்ளது. அந்த அதிகாரத்தின்படி ஆளுநர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மாநில அரசுக்கு ஆலோசனைகளை சொல்கின்ற வேளையில், சட்டப்படி, இந்திய அரசியலமைப்புபடி என்ன செய்ய வேண்டும் என்ற அறிவுரையை மாநில அரசுக்கு வழங்குகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: