பழையாறு துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் 5வது நாளாக கடலுக்கு செல்லவில்லை: வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு

மயிலாடுதுறை: கொள்ளிடத்தில் 1.57 லட்சம் கன அடி தண்ணீர் செல்வதால் பழையாறு துறைமுகத்தில் இருந்து இன்று 5வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மின்பிடிக்க செல்லவில்லை. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தினம்தோறும் 350 விசைப்படகுகள், 300 பைபர் படகுகள் மற்றும் 300 நாட்டு படகுகள் மூலம் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீர் பழையாறு துறைமுகம் அருகே அதிவேகமாக சென்று வங்க கடலில் கலக்கிறது. பழையாறு துறைமுகத்தின் வழியாக கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சம் கன அடிக்கும் மேலாக தண்ணீர் அதிவேகமாக செல்வதால் துறைமுகம் அருகே உள்ள முகத்துவாரத்தின் வழியாக படகுகளை கடலுக்குள் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அணைக்கரையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் இன்று 1.57 லட்சம் கன அடி தண்ணீர் செல்கிறது.

இதனால் இன்று 5வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் பழையாறு துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. உப்பு உற்பத்தி பாதிப்பு: நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்தது.  இதனால் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடிநெல்வயல் பகுதியில் 6,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. மேலும் உப்பு ஏற்றுமதி பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் பகுதியில் இருந்து 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

Related Stories: