தங்கம் விலையில் அதிரடி மாற்றம்; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.352 குறைந்தது: மீண்டும் ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது

சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.352 குறைந்தது. அதே நேரத்தில் மீண்டும் தங்கம் விலை சவரன் ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியுள்ளது. இது, நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 24ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.38,640க்கு விற்கப்பட்டது. 25ம் தேதி தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. அன்றைய தினம் சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,800க்கும் விற்கப்பட்டது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த விலை உயர்வு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. மறுநாள் 26ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.38,560க்கும் விற்கப்பட்டது. 27ம் தேதி சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.38,440க்கு விற்கப்பட்டது. 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையானது. 29ம் தேதி கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.4,765க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.38,120க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக, 3 நாட்களில் தங்கம் விலை ரூ.680 குறைந்தது.

30ம் தேதி தங்கம் விலை திடீரென அதிகரித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4790க்கும், சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,320க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை மீண்டும் குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.36 குறைந்து ஒரு கிராம் ரூ.4,754க்கும், சவரனுக்கு ரூ.288 குறைந்து ஒரு சவரன் ரூ.38,032க்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.44 குறைந்து ஒரு கிராம் ரூ.4,710க்கும், சவரனுக்கு ரூ.352 குறைந்து ஒரு சவரன் ரூ.37,680க்கும், விற்கப்பட்டது. அதே நேரத்தில் நீண்ட மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியுள்ளது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories: