ஓசூர் அருகே நள்ளிரவில் கூகுள் மேப் வழியில் சென்று வெள்ளத்தில் சிக்கிய கார்

ஓசூர்: ஓசூர் அருகே, கூகுள் மேப் காட்டிய வழியில் சென்றபோது, தரைப்பாலத்தில் 5 அடிக்கு மேல் ஓடிய வெள்ளத்தில் கார் சிக்கியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடகா மாநிலம் சர்ஜாபூர் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர், ஓசூரில் இருந்து சர்ஜாபுரத்திற்கு நேற்று முன்தினம் இரவு, காரில் புறப்பட்டனர். அப்போது, மழை பெய்து கொண்டிருந்ததால், மெதுவாக காரை ஓட்டிச்சென்றனர். நள்ளிரவு நெருங்கிய வேளையில், மழையும் விடாமல் பெய்ததால், பாதையை தவற விட்டனர்.

இதையடுத்து, கூகுள் மேப்பின் உதவியுடன், அவர்கள் பயணத்தை தொடர்ந்தனர். இதனிடையே, மழையால் ஓசூர் அருகே பேகெப்பள்ளியில் உள்ள தரைப்பாலத்தில், 5 அடிக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதனை அறியாத ராகேஷ், கூகுள் மேப் கொடுத்த தகவலின்படி, அந்த தரைப்பாலத்தில் காரை செலுத்தியுள்ளார். அப்போது, திடீரென கார் வெள்ளத்தில் சிக்கியது. இதனால் பீதியடைந்த ராகேஷ் உள்பட 4 பேரும், அபய குரல் எழுப்பினர். பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்கள், வந்து வெள்ளத்தில் சிக்கிய 4 பேரையும், காருடன் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

Related Stories: